×

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் 9 பேர் பதவியேற்பு

* இபிஎஸ், ஓபிஎஸ், அமைச்சர்கள் பங்கேற்பு
* சட்டப்பேரவையில் பலம் 122ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் 9 பேர் நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்களின் பலம் 122ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலுடன் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், திருவாரூர், குடியாத்தம், ஆம்பூர், தஞ்சாவூர், ஓசூர், அரவக்குறிச்சி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 13 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

வெற்றிபெற்ற திமுக எம்எல்ஏக்கள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற 9 அதிமுக எம்எல்ஏக்களான கந்தசாமி (சூலூர்), கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), தேன்மொழி (நிலக்கோட்டை), சதன்பிரபாகர் (பரமக்குடி), சின்னப்பன் (விளாத்திகுளம்), சம்பத் (சோளிங்கர்), நாகராஜன் (மானாமதுரை), சம்பத்குமார் (அரூர்), ராஜவர்மன் (சாத்தூர்) ஆகியோர் நேற்று காலை 9.45 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் தனபால் அலுவலகத்திற்கு வந்தனர்.

அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் பதவி பிரமாண உறுதிமொழி வாசித்து ஒவ்வொருவராக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொண்ட 9 பேரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றனர். பின்னர் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைச்சர்கள் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : AIADMK MLAs , The by-election, victorious, AIADMK MLA, 9 people, sworn in
× RELATED 14 அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்...