×

கோடை காலத்தில் போலிகள் புழக்கமும் அதிகரிப்பு... கூடுதல் விலைக்கு பாட்டில் ஜூஸ் விற்பனை

வேலூர்: பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களை விற்பனை செய்ய தயாரிப்பு நிறுவனத்தின் விவரங்கள், அதிகபட்ச விலை, காலாவதியாகும் தேதி உள்ளிட்ட விவரங்களை அச்சிட வேண்டியது கட்டாயம். இதில் அதிகபட்ச விலையை தவிர்த்து கூடுதல் விலையை வசூலிக்கக்கூடாது. ஆனால், ஒரு சில கடைகளில் உணவு பொருட்கள் கூடுதல் தொகைக்கு விற்பதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக கோடைகாலம் என்பதால் ஜூஸ் கேன்களை விற்பனை செய்பவர்கள் மின்சார செலவினத்தை காரணம் காட்டி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் உரிய அனுமதி பெறாமல் போலி ஜூஸ் கேன்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கடைகளில் ஜூஸ் கேன்கள் வாங்கினால், குளிர்சாதன பெட்டியில் வைத்து கூலிங் செய்வதற்காக, மின்சாரம் செலவாகிறது என்று கூறி 5 வரை கூடுதல் தொகையை வசூலிக்கின்றனர். அதேபோல் கூலிங் இல்லாவிட்டாலும் மின்வெட்டு காரணமாக கூலிங் இல்லை என்று கூறி கூடுதல் விலைக்கே ஜூஸ் கேன்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்ச விலை என்று குறிப்பிடப்படும் நிலையில், இதுபோன்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது எந்த விதத்தில் நியாயம்? அதேபோல், ஒரு சில கடைகளில் பல்வேறு புதிய கம்பெனிகள் பெயரில் ஜூஸ் கேன்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்ற கம்பெனிகள் உரிய அனுமதி பெற்றுள்ளதா? என்பதே சந்தேகம். வெயிலுக்கு பெரும்பாலானோர் ஜூஸ் வாங்கி குடிப்பதை சாதகமாக்கி கொண்டு போலிகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. மேலும் ஜூஸ் பாட்டில்கள் மீது காலாவதியாகும் தேதி குறிப்பிடப்படுவதில்லை. இதனால், பல மாதங்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட ஜூஸ் பாட்டில்கள் விற்பனை செய்வதாகவும் தெரிகிறது. இதுபோன்று முறைகேடான விற்பனையால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதோடு, காலாவதியான ஜூஸ் ரகங்கள் விஷமாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், ‘தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை குறித்து மட்டுமே ஆய்வு நடத்த உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் உள்ள ஜூஸ் பாட்டில்களை மட்டுமே பறிமுதல் செய்கிறோம்’ என்றனர். எனவே ஜூஸ் கேன்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது தொடர்பாக மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் உரிய ஆய்வு நடத்தி நடவடிக்ைக எடுக்க வேண்டும். ரசீது வழங்க மறுக்கும் வியாபாரிகள்: நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி, பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் கட்டாயம் ரசீது வழங்க வேண்டும். இதன் மூலம் பொருட்களில் குளறுபடி இருந்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இழப்பீடு பெற முடியும். ஆனால், பெரும்பாலான கடைகளில் ஜூஸ் கேன்கள், ஜூஸ் பாட்டில்கள் உட்பட உணவு பொருட்களுக்கும் ரசீது வழங்குவது கிடையாது. இதுவே உணவு பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முக்கிய காரணமாகும். எனவே, கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு ரசீது வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டியது அவசியம் என்ற கோரிக்கையும் உள்ளது.

Tags : Vellore, bottle juice
× RELATED சென்னை நேப்பியர் பாலம் அருகே கார் கவிழ்ந்து விபத்து