×

முன்னாள் மாணவர்கள், தொழில் அதிபர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுக்க வாருங்கள்: அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு

சென்னை: முன்னாள் மாணவர்கள், தொழில் அதிபர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுக்க வாருங்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார். பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று வெளியிட்ட அறிக்கை: அரசு பள்ளியில் பயின்று தற்போது பல்வேறு தொழில் நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்கள், தற்போது தொழில் அதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்கள், என்ஜிஓக்கள் தங்களது சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் அரசு பள்ளிகளை தத்தெடுத்து, பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்திட வாருங்கள் என்று இருகரம் கூப்பி அழைக்கின்றேன்.

2018-2019ம் ஆண்டில் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் 519 அரசு பள்ளிகளில் இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற பணிகள் நிறைவேற்றப்பட்டது. அரசு பள்ளிகளை தத்தெடுக்க விரும்பும் சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களுக்கு எவ்வித தடையும் தாமதமும் இன்றி உடனடியாக பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அரசின் பணியோடு, தங்களின் பங்களிப்பும் இணையும் போது தான் கல்வியின் தரம் மேலும் சிறக்கும், வளம் பெறும். எனவே, அனைவரும் வாருங்கள் ஒன்று சேர்ந்து வளமிகு அரசு பள்ளிகளுக்கு மேலும் பலம் சேர்க்க கரம் கோர்த்து செயல்படுவோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chengottai ,entrepreneurs ,government schools , Former students, Business Principals, Government School, Minister Chengottai
× RELATED பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி...