×

பஸ்சில் பயணித்தபோது டவுசர் கிழிந்தது எம்.டி.சி.,க்கு 7 ஆயிரம் அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பஸ்சில் பயணித்தபோது சீட்டில் இருந்த ஆணி பயணியின் டவுசரை கிழித்ததால், மாநகர போக்குவரத்து கழகத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் 7 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.சென்னை, கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவர், கடந்த 2011ம் ஆண்டு தாம்பரத்தில் இருந்து கிண்டிக்கு, மாநகர பேருந்தில் பயணம் செய்தார். அப்போது பேருந்தில் ஏறிய சொக்கலிங்கம் இடதுபுறமாக ஒரு இருக்கையில் அமர்ந்துள்ளார். இந்நிலையில், இருக்கையில் வெளியே நீட்டிக்கொண்டு இருந்த ஆணி ஒன்று அவர் அணிந்திருந்த டவுசரை கிழித்துள்ளது. இதனால் சொக்கலிங்கம் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். மேலும், அவர் இதுகுறித்து டிரைவர், கண்டக்டரிடம் கேட்டபோது, அலட்சிய போக்குடன் பதிலளித்துள்ளனர்.  இதையடுத்து, சொக்கலிங்கம் சென்னை பல்லவன் இல்லத்தில் உள்ள மாநகர போக்குவரத்து கழகத்திடம், டவுசரின் விலை ₹2 ஆயிரத்தை கேட்டுள்ளார். அவர்களும் எந்த பதிலும் தரவில்லை. இதனால் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். பின்னர் உரிய இழப்பீடு கோரி வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இருந்தும் பதில் வரவில்லை.

இதையடுத்து சென்னையில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் இழப்பீடு வாங்கி தரக்கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி மோனி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பேருந்து இருக்கையில் ஆணி இருப்பது குறித்து நடத்துனர் கூறியும், பயணி இருக்கையில் அமர்ந்துள்ளார். இதில் பேருந்தின் தரப்பில் எந்த தவறும் இல்லை. எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகம், கிழிந்த டவுசரின் விலை ₹2 ஆயிரம், மன உளைச்சலுக்கு ₹5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.



Tags : Toussing Tornado MTSC ,Consumer Court , Toussare, traveling, bus,fine, Consumer court ,orders
× RELATED நுகர்வோர் நீதிமன்றத்திற்கு சொந்த...