×

நுகர்வோர் நீதிமன்றத்திற்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: இடம் ஒதுக்கி தர வலியுறுத்தல்

திருவாரூர்: திருவாரூரில் இயங்கி வரும் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. திருவாரூர் குமரகோவில் தெருவில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றமானது கடந்த 19 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை கட்டிடம் ஒன்றில் இயங்கி வரும் நிலையில் தற்போது மாதம் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் என்ற அளவில் வாடகை கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் குறைதீர் ஆணைய தலைவர் மற்றும் நியமன உறுப்பினர்களை கொண்டும் இயங்கி வரும் இந்த நீதிமன்றத்தில் 8 ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். இதில் நுகர்வோர்களுக்கு ஏற்படும் மருத்துவ சேவை குறைபாடு, வங்கி சேவை குறைபாடு, பொதுத்துறை நிறுவனங்களின் சேவை குறைபாடு மற்றும் காலாவதியான பொருட்கள் விற்பனை, கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பது உட்பட பல்வேறு வகையான குறைபாடுகளுக்கு மனு தாக்கல் செய்யபட்ட 90 நாட்களில் தீர்வு காணப்பட்டு வருகிறது.

இதன்காரணமாக பொது மக்கள் பலரும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நீதிமன்றத்திற்கு புதிதாக சொந்த கட்டிடம் கட்டுவதற்காக கடந்த 2015ம் நிதியாண்டில் மத்திய அரசு மூலம் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய கட்டிடம் கட்டுவதற்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் 50 செண்ட் இடத்தினை ஒதுக்கிதருமாறு அதே ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பபட்டது. அதன் பின்னர் மேற்படி நீதிமன்றத்தின் தலைவர் மூலமும் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தும் இதுவரையில் 9 ஆண்டு காலமாக இடம் ஒதுக்கி தராததால் மாநில அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு கட்டிட வாடகையாக ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் வரையில் இழப்பீடு ஏற்பட்டு வருவதுடன் ஒதுக்கப்பட்ட நிதியும் திரும்ப சென்றுவிட்டது என்று கூறப்படுகிறது.

எனவே மேற்படி நீதிமன்றத்திற்கான இடத்தினை உடனடியாக மாவட்ட நிர்வாகம் வழங்கி அரசுக்கு ஏற்படும் வாடகை இழப்பை தடுக்க வேண்டும் என்று நுகர்வோர் அமைப்பும், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நுகர்வோர் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு கூறுகையில், திருவாரூரில் இந்த நுகர்வோர் நீதிமன்றத்திற்கான சொந்த கட்டிடம் கட்டுவதற்கு இடம் கிடைக்காததால் ஒதுக்கப்பட்ட நிதி திரும்ப சென்றுவிட்டது. மாநில அரசுக்கும் வருடம் ஒன்றுக்கு ரூ.1லட்சத்து 80 ஆயிரம் வாடகை செலவும் ஏற்படுகிறது.

எனவே சொந்த கட்டிடம் கட்டுவதற்கு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலோ அல்லது அதன் அருகிலேயோ இடம் ஒதுக்கி தருவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய கட்டிடம் கட்டும் வரையில் அரசுக்கு ஏற்படும் வாடகை இழப்பீனை தடுக்கவும், வழக்குகள் தொடர்பாக வழக்கறிஞர்கள் இந்த நுகர்வோர் ஆணையத்திற்கு எளிதாக வந்து செல்லும் வகையில் அவர்களின் நேர விரயத்தை குறைக்கும் வகையிலும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில் இருந்து வரும் கலெக்டர் அலுவலகத்தின் கூடுதல் கட்டிடத்தில் இடம் ஒதுக்கி தர வேண்டும் என்றார்.

The post நுகர்வோர் நீதிமன்றத்திற்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: இடம் ஒதுக்கி தர வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,District Consumer Court ,Tiruvarur Kumarakovil Street ,Court ,
× RELATED 6,417 மாணவர்கள் புதிதாக சேர்க்கை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்