×

தேர்தலில் பல தொகுதிகளில் டெபாசிட் காலி தென்மாவட்டங்களில் அமமுக கூடாரம் கலகலக்கிறது: அதிமுகவிலும் களையெடுப்பு

நெல்லை: மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் கடந்த 23ம்தேதி வெளியானது. இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் படுதோல்வி அடைந்தது. தென்மாவட்டங்களில் ஓரிரு தொகுதிகளை அமமுக கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் பல தொகுதிகளில் அக்கட்சி டெபாசிட்டை இழந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட அமமுக துணை பொதுசெயலாளர் தினகரன் வெற்றி பெற்றார். அதுபோன்ற வெற்றி இந்த தேர்தலிலும் கிடைக்கும் என்று எதிர்பார்த்த அமமுக கட்சியினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

மக்களவை தொகுதி முடிவுகளை போலவே, சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகளும் அமமுகவிற்கு சாதகமாக இல்லை. சில தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யத்திற்கும் குறைவான ஓட்டுக்களையே அமமுக பெற முடிந்தது. இத்தேர்தல் முடிவுகள் அமமுக வட்டாரத்தை கலகலக்க செய்துள்ளது. தினகரனை நம்பி வந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் மட்டுமின்றி, அவரது ஆதரவாளர்களும் தங்களின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற நிலைமையில் உள்ளனர். தென்மாவட்டங்களை சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகள் அதிமுக நிர்வாகிகளிடம் பேசி வருகின்றனர். சென்னை சென்று தலைவர்கள் முன்னிலையில் அதிமுகவில் சேர காய் நகர்த்தி வருகின்றனர். மாநில அமைப்பு செயலாளராக இருந்த நெல்லையை சேர்ந்த ஆர்.பி.ஆதித்தன், முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்து பிள்ளையார் சுழி போட்டுவிட்டார். அதைத்தொடர்ந்து அமமுக மாவட்ட நிர்வாகிகள் சிலரும் அதிமுகவுக்கு தாவ தயாராகி உள்ளனர்.

நெல்லை, தூத்துக்குடி, குமரியில் அமமுகவை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் தேர்தலுக்கு முன்பே தினகரன் மீது அதிருப்தி அடைந்தனர். தேர்தல் செலவுக்கு ஒவ்வொரு தொகுதிக்கும் பணம் வரும் என எதிர்பார்த்த சூழலில், கோடிக்கணக்கான ரூபாய் விருதுநகர் தொகுதிக்கு மட்டுமே தரப்பட்டதாகவும், மற்ற தொகுதிகளை தலைமை கைவிட்டுவிட்டதாகவும் அமமுக நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.எரிகிற கொள்ளியில் பிடுங்கின வரை லாபம் என்கிற கதையாக, இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு அதிமுக நிர்வாகிகளும் செயல்படுகின்றனர். அதிமுகவில் ஏதாவது முக்கிய பொறுப்பை வாங்கி தருகிறோம் என ஆசை வார்த்தை காட்டுகின்றனர்.

இந்நிலையில் தென்மாவட்டத்தை சேர்ந்த பாஜ பிரமுகர் ஒருவரும் அதிமுகவை விட பாஜவில் வளர்ச்சியும், வாய்ப்புகளும் அதிகம் என கூறி அமமுக நிர்வாகிகளை தங்கள் கட்சிக்கு இழுக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இதுஒருபுறமிருக்க, வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளில் அதிமுக தோற்றது குறித்து கட்சி தலைமை, சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டுள்ளது. அதன் அடிப்படையில் அதிமுகவிலும் விரைவில் முக்கிய நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படலாம் என தெரிகிறது.

Tags : Ampute ,districts ,Purging ,Deposit Empty South , Election, deposit vacancy, ammute, AIADMK
× RELATED இரக்கம் காட்டாத வெயில்; தமிழ்நாட்டில்...