×

சேலம், நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி தொகுதிகளில் அதிமுக கூட்டணி ஓட்டுக்கு வேட்டு வைத்த 8 வழிச்சாலை

சேலம்: தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை மக்கள் எதிர்ப்பு திட்டங்கள் பந்தாடியுள்ளது. குறிப்பாக சேலம், நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சியில் 8 வழிச்சாலை, உயர் மின்அழுத்த கோபுரம், கெயில் திட்டத்தால் பாதிக்கும்  மக்கள், மிகப்பெரிய தோல்வியை அதிமுக கூட்டணிக்கு வழங்கியுள்ளனர். தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 38 தொகுதிக்கு தேர்தல் நடந்தது. இதில், திமுக தலைமையிலான கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக கூட்டணியில் தேனி தொகுதியில் மட்டும் துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவிந்திரநாத்குமார் வெற்றி பெற்றுள்ளார். திமுக கூட்டணியின் வேட்பாளர்கள் பெரும்பாலானோர் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். மிக அதிகபட்சமாக திண்டுக்கல் தொகுதியில் 5  லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வேலுசாமி வெற்றி பெற்றார்.இப்படி மாநிலம் முழுவதும் மிக அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தது, மக்கள் எதிர்ப்பு திட்டங்களை செயல்படுத்த அதிமுக அரசு காட்டிய முனைப்பு எனத்தெரியவந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு, தமிழகத்தில் மக்கள் பாதிக்கப்படுகின்ற வகையிலான திட்டங்களாக சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம், மீத்தேன் எடுப்பு திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்கும்  திட்டம், கொச்சின்-பெங்களூரு கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் போன்றவற்றை செயல்படுத்த அதிதீவிரம் காட்டி வருகிறது. இந்த திட்டங்களை திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்க்கும் நிலையில், ஆளும் அதிமுகவோ மவுனமாக  இருந்துகொண்டு, அத்திட்டங்களுக்கு ஆதரவு அளித்தது. மாநில அரசின் இந்த நடவடிக்கையை மக்கள், தேர்தல் வாக்குப்பதிவின் போது காட்டியுள்ளனர். அதனால் தான், அதிமுக கூட்டணியின் வேட்பாளர்கள் அனைவரும் பந்தாடப்பட்டுள்ளனர். 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் சேலம், தர்மபுரி,  கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் தொகுதியில் வசிக்கும் வாக்காளர்களின் பெரும்பகுதியினர், திமுக கூட்டணிக்கு ஆதரவளித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் பொன்.கவுதமசிகாமணி 1,33,926 வாக்குகள் பெற்றார். அங்கு அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ் 52,858 வாக்குகள் மட்டுமே  பெற்றுள்ளார். 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் மக்கள் அதிகமுள்ள இப்பகுதி வாக்காளர்கள், தங்களின் வாக்குகளை திமுகவிற்கு வாரி வழங்கியுள்ளனர். இதுபோலவே சேலம் தொகுதியில் ஓமலூர் காமலாபுரம் விமானநிலைய  விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள், அதிமுக வேட்பாளர் சரவணனை புறம்தள்ளி, திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு வாக்குகளை அள்ளி வழங்கினர். நாமக்கல் மாவட்டத்தில் உயர் மின் கோபுர திட்ட எதிர்ப்பால், திமுக கூட்டணியான கொமதேக வேட்பாளர் சின்ராஜ் 2.65 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை பந்தாடினார். தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் அன்புமணி  தோல்வியடைய முக்கிய காரணமாக கெயில் எரிவாயு பதிக்கும் திட்டம், 8 வழிச்சாலை திட்டம் விளங்கியதாக கட்சியினர் கூறுகின்றனர். இப்படி மாநிலம் முழுவதும் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் மக்கள் எதிர்ப்பு திட்டங்கள்,  அதிமுக கூட்டணிக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.



Tags : coalition ,Salem ,AIADMK ,Namakkal ,constituencies ,Kallakurichi ,Dharmapuri , Salem, Namakkal, Dharmapuri, Kallakurichi , AIADMK
× RELATED சேலம் சூரமங்கலத்தில் அதிமுக சார்பில்...