×

நாங்களா கத்துக்குட்டிகள்... உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானை ஊதித்தள்ளிய ஆப்கானிஸ்தான்

பிரிஸ்டோல்: உலககோப்பை பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. பிரிஸ்டோலில்  நேற்று நடைப்பெற்ற பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய இமாம் உல் ஹக், ஃபக்ஹர் ஜமான் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்தனர். முகம்மது நபி பந்து வீச்சில்  ஜமான் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பாபர் ஆஸம் சிறப்பாக விளையாடி சதமடித்தார்.

அவர் 112 ரன்களுக்கும், இமாம் 32 ரன்களுக்கும், சோயிப் மாலிக் 44 ரன்களுக்கும்  ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் ஆப்கானிதான் வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர். அதனால் 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த பாகிஸ்தான் 262 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் முகம்மது நபி 3 விக்கெட்களும், ரஷித்கான், தவலத் ஜார்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்களும், அஃப்டாப் ஆலம், ஹமீத் ஹாசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 263 ரன்கள் எடுத்து முதல் முறையாக ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணியை ஆப்கன் அணி வீழ்த்தி சாதனை வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணியில் ஹஸ்மத்துல்லா 74 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வித்திட்டார். பாகிஸ்தான் அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு புது உற்சாகத்தை அளித்துள்ளது. மேலும் உலக கோப்பையில் பல அணிகளுக்கு சவால் விடுக்கும் அணியாக ஆப்கானிஸ்தான் அணி விளங்கும் என்று கிரிக்கெட் ரசிகர்கள், விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Tags : World Cup ,training match ,Afghanistan ,Pakistan , World Cup 2019, Cricket, Training, Afghanistan, Pakistan
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...