×

கொடைக்கானலில் பீச்சஸ் விளைச்சல் அமோகம்

* மருத்துவ குணங்கள் கொண்டது

திண்டுக்கல் :  தமிழில் ‘குழிப்பேரி’ என்று அழைக்கப்படும் பீச்சஸ் பழங்களின் தாயகம் சீனாவாகும். ஆப்பிள் பழம் போன்று  தோற்றமளிக்கும் இப்பழமானது ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் விளைச்சல் பருவமாகும்.  கொடைக்கானல் அருகே செண்பகனூர், வில்பட்டி, பள்ளங்கி, அடிசரை, மாட்டுப்பட்டி, பூம்பாறை உள்ளிட்ட பல மலைக்கிராமங்களில் இப்பழங்கள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது.  

தற்போது பீச்சஸ் சீசன் துவங்கி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. பல பகுதியில் அறுவடையும் செய்யப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு சரியான மழைப்பொழிவு இருந்ததால் இந்த சீசனில் பிச்சஸ் பழங்கள் நல்ல விளைச்சலை தந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பீச்சஸ் பழங்கள் பழ ரசங்களில் கலப்பதற்கும், கேக் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பிச்சஸ் பழத்தில்  உயிர் சத்துக்கள் மட்டுமின்றி பொட்டாசியம் ப்ளோரைடு, இரும்பு பீட்டாகரோட்டின் போன்ற தாது சத்துக்களும் அதிகளவில் உள்ளன.

மேலும் இப்பழங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குதல், பார்வை திறனை அதிகரிப்பு, சிவப்பு அணுக்கள் அதிகரிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பை சீராக்குதல் உள்ளிட்ட பல மருத்துவ குணங்களை உடையது எனவும் கூறப்படுகிறது. தற்போது அதிக விளைச்சலை தந்துள்ள இந்த பழங்கள் கிலோ ஒன்றிற்கு 40 ரூபாய் மட்டுமே கிடைப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஆள் கூலி, லாரி வாடகை போன்றவைக்கே இது சரியாக இருக்கிறது’ என்றனர்.

Tags : Kodaikanal,peaches,medicinal properties
× RELATED இதுவரை 8 தேர்தல் வழக்குகள்...