×

கல்வெட்டில் ஓபிஎஸ் மகன் எம்பியான விவகாரம் கோயிலில் கல்வெட்டு வைத்த முன்னாள் போலீஸ்காரர் கைது

தேனி: துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் பெயருடன் எம்பி என கோயில் கல்வெட்டு வைத்த விவகாரத்தில், மாஜி போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குச்சனூர் காசி அன்னபூரணி கோயிலில் கடந்த 2 நாட்களுக்கு முன் வைக்கப்பட்ட கல்வெட்டில், துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார் பெயருக்கு முன்னாள் தேனி பாராளுமன்ற உறுப்பினர்’ என்று செதுக்கப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் தமிழகமெங்கும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதுதொடர்பாக ரவீந்திரநாத்குமாரின் தேர்தல் முகவரும், அதிமுக வக்கீல் அணி தலைவருமான சந்திரசேகரன், மற்றும் வக்கீல்கள், நிர்வாகிகள் தேனி எஸ்பி பாஸ்கரனிடம் புகார் செய்தனர். விசாரணையில் குச்சனூரை சேர்ந்த முன்னாள் போலீஸ்காரர் வேல்முருகன் (48) என்பவர் இந்த கோயிலை கட்டி கல்வெட்டு வைத்தது தெரிய வந்தது. புகார் அடிப்படையில் வேல்முருகனை சின்னமனூர் போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து அதிமுக வழக்கறிஞர்கள் கூறுகையில், குச்சனூர் கோயிலில் கல்வெட்டு வைத்ததன் பின்னணியில் உள்ளவர்களையும், அவர்களது உள்நோக்கத்தையும் விசாரணை மூலம் வெளிப்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பான போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவுவதை தடுக்க வேண்டும் என புகார் கொடுத்துள்ளோம் என்றனர். தேனி எஸ்பி பாஸ்கரன் கூறுகையில், அதிமுக புகாரின்பேரில், தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படுதல், தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்பே எம்பி என ஒருவரை பற்றி கல்வெட்டு வைத்து, மக்களை நம்ப வைத்து ஏமாற்றுதல், போலி ஆவணங்களை தயார் செய்து மக்கள் பார்வைக்கு வைத்தல் என்பது உட்பட பல்வேறு பிரிவுகளில் சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக கோயிலை நிர்வகித்து வரும் முன்னாள் போலீஸ்காரர் வேல்முருகனை கைது செய்துள்ளோம். அவர், தான் தேனி பாராளுமன்ற வேட்பாளர் என்று கல்வெட்டு செதுக்க சொன்னதாகவும், கல்வெட்டு செதுக்கியவர் தேனி பாராளுமன்ற உறுப்பினர் என செதுக்கி விட்டதாகவும் கூறியுள்ளார். அந்த கல்வெட்டினை அகற்றி விட்டு வேறு கல்வெட்டு வைத்துள்ளோம். சமூக வலைத்தளங்களில் உலா வரும் படங்களை தடுப்பது மிகவும் சிரமமான விஷயம். சமூக வலைத்தளங்களின் அத்தனை பிரிவுகளிலும் இந்த போட்டோக்கள் ஊடுருவி விட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

யார் இந்த வேல்முருகன்?

கல்வெட்டு பிரச்னையில் கைதான வேல்முருகன், சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர். அதிமுகவின் தீவிர விசுவாசியான இவர், ஜெயலலிதா பெயர் குறித்து ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேசியபோது, அவரை கைது செய்ய வேண்டுமென போலீஸ் சீருடையுடன் தேனியில் போராட்டம் நடத்தி பரபரப்பு ஏற்படுத்தியவர். ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பு வந்தபோது, சென்னையில் சீருடையுடன் இவர் தீக்குளிக்க முயன்றார். கடந்த 2016ம் ஆண்டு ஜெயலலிதா உடல்நிலை மோசமடைந்து அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, அவர் நலம் பெற வேண்டி தேனி விநாயகர் கோயில் முன்பு போலீஸ் சீருடையுடன் முடி காணிக்கை செலுத்தினார். சசிகலாவுக்கு எதிராக ஜெயலலிதா சமாதியில் போராட்டம் நடத்தப்போவதாக கூறி ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்டார். தொடர்ந்து போலீசாருக்கான ஒழுக்கத்தை மீறியதால் கடந்த ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : policeman , Observer affair, OPS's son, Former policeman arrested , temple
× RELATED டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது...