×

டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது கண்ணீர் புகை குண்டால் மேலும் ஒரு விவசாயி பலி: இதுவரை ஒரு போலீஸ்காரர் உட்பட 6 பேர் மரணம்

புதுடெல்லி: டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது நடந்த கண்ணீர் புகை குண்டால் மேலும் ஒரு விவசாயி பலியாகி உள்ளார். இதுவரை ஒரு போலீஸ்காரர் உட்பட 6 பேர் ெவவ்வேறு காரணங்களால் இறந்தனர்.  வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால் அவர்கள் டெல்லிக்குள் அனுமதிக்கப்படாததால் கடந்த 13ம் தேதி முதல் டெல்லி எல்லையில் முகாமிட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 21ம் தேதி அரியானா-பஞ்சாப் எல்லையில் உள்ள கானவுரியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் நுரையீரல் தொற்று ஏற்பட்டு கர்னைல் சிங் (62) என்ற விவசாயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நேற்று காலை இறந்தார். அதற்கு முன்னதாக இளம் விவசாயி ஷுப் கரண் சிங் என்பவர், போலீசாரின் கண்ணீர் புகை குண்டால் உயிரிழந்தார். அதனால் டெல்லி நோக்கி பேரணியை, நாளை வரை (பிப். 29) ஒத்தி வைப்பதாக விவசாய அமைப்புகள் அறிவித்தன.

இதுகுறித்து விவசாய அமைப்புகளின் தலைவர்கள் கூறுகையில், ‘பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா அடுத்த அர்னோவைச் சேர்ந்த கர்னைல் சிங் என்பவர், அரியானா காவல்துறையினர் நடத்திய கண்ணீர் புகை குண்டால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விவசாயிகளின் போராட்டம் தொடங்கிய 15 நாட்களில் இதுவரை 6 பேர் இறந்துள்ளனர். அவர்களில் 3 விவசாயிகளும், ஒரு போலீஸ் அதிகாரியும் மாரடைப்பால் உயிரிழந்தனர். மேலும் இருவர் கண்ணீர் புகை குண்டால் உயிரிழந்தனர்’ என்று தெரிவித்தனர்.

The post டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது கண்ணீர் புகை குண்டால் மேலும் ஒரு விவசாயி பலி: இதுவரை ஒரு போலீஸ்காரர் உட்பட 6 பேர் மரணம் appeared first on Dinakaran.

Tags : DELHI ,NEW DELHI ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு