×

தற்காலிக ஊழியர்களின் எண்ணிக்கையை உயர்த்தி காட்டி சுகாதாரத்துறையில் 3 ஆண்டுகளில் ரூ35 கோடி முறைகேடு: அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

சென்னை: அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் சென்னையில் நேற்று கூறியதாவது: பத்மாவதி ஹாஸ்பிட்டாலிட்டி சர்வீசஸ் நிறுவனத்தில் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவின் தம்பி பங்குதாரராக உள்ளார். தமிழகத்தில் மருத்துவக்கல்வி இயக்ககத்தின்கீழ் செயல்படும் கல்லூரிகளில் 70 மருத்துவமனைகளில் இந்த நிறுவனம் சார்பில் 9 ஆயிரம் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் டெண்டர் கோரப்பட்டு டெண்டர் இறுதி செய்யப்பட வேண்டும். ஆனால் பத்மாவதி ஹாஸ்பிட்டாலிட்டி சர்வீசஸ் நிறுவனத்துக்கே டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. பத்மாவதி ஹாஸ்பிட்டாலிட்டி சர்வீசஸ் நிறுவனத்தில் இருவிதமான பதிவேடுகளை பயன்படுத்தியுள்ளனர். ஒன்று பணியாளர்கள் பணிக்கு வந்தது, மற்றொன்று அரசிடம் இருந்து பணியாளர்கள் செய்த வேலைக்காக பணம் பெறுவதற்கான பதிவேடு.

சென்னையில் உள்ள குறிப்பிட்ட அரசு மருத்துவனையில் 100 பேர் பணிக்கு இருக்க வேண்டும் என்றால், 70 பேர்தான் பணி செய்துள்ளனர். அந்த 100 பேர் பணிக்கு வந்ததாக பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு, அவர்களை வேறு தனியார் மருத்துவமனைகள், கோயில்களில் பணிக்கு அனுப்பியுள்ளனர். இதை மருத்துவமனை நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. ஆனால், அவர்களும் அரசு மருத்துவமனையில் பணியாற்றியதாக கணக்கு காட்டி அரசிடம் பணம் பெற்றுள்ளனர். இதன்மூலம் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் மட்டும் பிப்ரவரி மாதத்தில் ரூ3.41 லட்சம் கூடுதலாக கணக்கு காட்டி தமிழக அரசிடம் பணம் பெற்றுள்ளனர். 3 ஆண்டுகளில் 70 அரசு மருத்துவமனைகளில் இந்த வகையில் அவர்கள் ரூ35 கோடியை முறைகேடாக பெற்றுள்ளனர்.

அதேபோல், தற்காலிக பணியாளர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை வழங்க வேண்டும். பிஎப் பிடிக்கப்பட்டு அவர்களின் பிஎப் கணக்கில் செலுத்த வேண்டும் என்று டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பத்மாவதி ஹாஸ்பிட்டாலிட்டி சர்வீசஸ் நிறுவனம் பணியாளர்களுக்கு வார விடுமுறை வழங்கவில்லை. மாறாக பணிக்கு வராத நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்கிறது. டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை முறையாக பின்பற்றவில்லை. பிங்கர் பிரின்ட் சென்சார் அடிப்படையிலான அட்டன்டஸ் ரிப்போர்ட் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால் அட்டன்டன்ஸ் ரிப்போர்ட் பத்மாவதி ஹாஸ்பிட்டாலிட்டி சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமையகத்துக்கு செல்கிறது.  
இதுதொடர்பாக 2017ம் ஆண்டே லஞ்சஒழிப்பு போலீசாரிடம் ஆதாரங்களுடன் புகார் அளித்தோம். ஆனால் புகார் மீது இதுவரை எப்ஐஆர் கூட பதிவு செய்யவில்லை. சுகாதாரத்துறை அமைச்சர் தான் இந்த முறைகேடுக்கு பொறுப்பு. ஆனால் அவர் இந்த புகாருக்கு பின்னர், பதவி நீக்கம் செய்யப்படவில்லை அல்லது வேறு துறைக்கு மாற்றப்படவில்லை. அதே துறையிலேயே தொடர்கிறார். இந்நிலையில் இந்த ஆண்டுக்கு விரைவில் டெண்டர் விடப்பட உள்ளது. அதனால் லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜெயராமன் கூறினார். முறைகேடு தொடர்பாக 2017ம் ஆண்டே லஞ்சஒழிப்பு போலீசாரிடம் ஆதாரங்களுடன் புகார் அளித்தோம். ஆனால் புகார் மீது இதுவரை எப்ஐஆர் கூட பதிவு செய்யவில்லை

Tags : Charter , Temporary employee, health care, abuse and charity movement
× RELATED மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தனது...