×

நாளை மறுநாள் 4 தொகுதி இடைத்தேர்தல்... பாதுகாப்பு பணியில் 15,939 போலீசார்... வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா... சத்யபிரதா சாஹூ

சென்னை: 4 தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் அன்று 15,939 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இதில் மத்திய பாதுகாப்பு படையினர் 1,300 பேரும், தேர்தல் நுண் பார்வையாளர்களாக 1,364 பேரும் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் 63 வேட்பாளர்கள் உள்ளதால் 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். பதற்றமான 656 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா வைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும், கமல் பேச்சு தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.

தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதையடுத்து, தமிழகத்தில் மேலும் காலியாக உள்ள சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை மறுதினம் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

சூலூரில் 22 பேரும், திருப்பரங்குன்றம் தொகுதியில் 37 பேரும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 15 பேரும், அரவக்குறிச்சி தொகுதியில் 63 பேரும் என மொத்தம் 137 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இன்று மாலை 6 மணியுடன் இந்த 4 தொகுதிகளிலும் பிரசாரம் ஓய்கிறது. 4 தொகுதிகளிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மற்றும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.


Tags : policemen ,by-elections ,Satyabrata Sahu , 4 constituencies, police protection work, Chief Electoral Officer, Satya Pratha Sahu
× RELATED தேர்தல் பணிக்கு சென்றபோது 3 போலீசார்...