×

லாட்டரி அதிபரின் காசாளர் மரண வழக்கு: உடலில் ஏற்பட்ட காயங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

சென்னை: தொழிலதிபர் மார்டின் உதவியாளர் பழனிச்சாமியின் மர்ம மரணம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான வீடு மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள அலுவலகங்கள், உறவினர் வீடுகள் போன்றவற்றில் கடந்த ஏப்ரல் மாதம் 31ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த நிலையில், லாட்டரி அதிபர் மார்டிக்கு சொந்தமான ஹோமியோபதி கல்லூரியின் காசாளராக பணியாற்றிய கோவை வடம்புரியை சேர்ந்த பழனிச்சாமியின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதையடுத்து, கடந்த மே 3ம் தேதி காரமடை காவல் எல்லைக்குட்பட்ட வெள்ளியங்காடு அருகே உள்ள குட்டையில் காசாளர் பழனிசாமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பழனிச்சாமி மறதி சந்தேகம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது மகன் மனு தாக்கல் செய்தார்.

அதில், வருமான வரித்துறையின் சித்தரவதை காரணமாகவே தனது தந்தை மரணமடைந்திருக்கிறார் எனவும், தனது தந்தை உடலில் ரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவரை திட்டமிட்டு கொலை செய்துள்ளதாகவும் மனு தொடரப்பட்டிருந்தது. மேலும் தனது தந்தை உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் சார்பில் குழு அமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து, இந்த கொலை வழக்கில் வருமான வரித்துறையினருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு கடந்த 9ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பழனிச்சாமியின் மரண விவகாரத்தில் இதுவரை நடைபெற்ற விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் இந்த வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையை அறிக்கையாக தாக்கல் செய்தனர். அந்த அறிக்கை திருப்தி அளிக்காததால், பழனிச்சாமியின் உடலில் உள்ள காயங்கள், அவர் உயிரோடு இருக்கும் பொழுது ஏற்பட்டதா? அல்லது இறந்த பிறகு யாரேனும் காயங்கள் ஏற்படுத்தினார்களா? என்று சந்தேகம் எழுப்பினர். தற்போது பழனிச்சாமியின் உடல் பதப்படுத்தப்பட்டுள்ள நிலை குறித்தும் கேள்வி எழுப்பினர். அவரது வாயில் ஏற்பட்டுள்ள ரத்தக்காயங்கள் குறித்தும் நாளை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags : Lottery Principal Cashier ,Government ,Tamil Nadu , Lottery Principal, Cashier, Death, Report, Tamilnadu Government, HC
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...