கோவை: கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சின்னியம்பாளையம் பகுதியில் நேற்று மாலை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். டிடிவி தினகரன் எப்போது வந்தார், எப்போது கட்சி ஆரம்பித்தார் என்ேற தெரியவில்லை. அவர் ஒரு பெரிய தலைவர்போல், இங்கு வந்து மாறி மாறி பேசுகிறார். அவரை கட்சியிலிருந்து ஜெயலலிதா நீக்கினார். அதிமுக ஆட்சிக்கு டிடிவி தினகரன் நெருக்கடி கொடுத்தார். அதை நாங்கள் தவிடு பொடியாக்கி விட்டோம். எந்த தொகுதியிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறக்கூடாது என்பதுதான் அவரது எண்ணம். அவர், எதிர்க்கட்சிகளுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளார்.
டிடிவி தினகரன், நமது கட்சியால் வளர்ந்தவர், செல்வாக்கு அடைந்தவர். ஆனாலும், நமது கட்சியை உடைக்க நினைக்கிறார். அது நடக்காது. ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குகளை பிரிக்க பார்க்கிறார். அதுவும் நடக்காது. அவரது கனவு ஒருபோதும் பலிக்காது. நாங்கள் ஜனநாயக முறைப்படி கட்சி நடத்துகிறோம். மு.க.ஸ்டாலின் என்னைவிட வயதில் மூத்தவர். ஆனாலும், 25 வயது இளைஞர்போல் பேசிக்கொண்டு இருக்கிறார். இந்தியாவிலே குற்றமில்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இனி குற்றங்கள் நடைபெறாத வகையில் அனைத்து நடவடிக்கையும் எடுப்போம். இத்தொகுதியில் விடுபட்டுப்போன அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவோம். அவினாசி-அத்திக்கடவு திட்டத்தின் இரண்டாவது திட்டப்பணிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த திட்டமும் விரைவில் நிறைவேற்றப்படும். இவ்வாறு பழனிசாமி பேசினார். முதல்வர் பிரசாரத்தில், கூட்டம் கலையாமல் இருக்க, குத்தாட்டம் நடத்தப்பட்டது.
விசைத்தறியாளர்களின் கடன் விரைவில் தள்ளுபடி
கோவை சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோமனூர் பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு பேசியதாவது: இப்பகுதியில் நெசவாளர்கள் நிறைய பேர் உள்ளனர். விசைத்தறி தொழில்தான் இப்பகுதியில் பிரதானமாக உள்ளது. நெசவாளர்களின் பிரச்னையை நாங்கள் நன்கு அறிவோம். விசைத்தறியாளர்கள் வாங்கியுள்ள ₹65 கோடி கடன் விரைவில் தள்ளுபடி செய்யப்படும். 30.3.2017 வரை கடன் வாங்கியவர்கள் இதற்கு தகுதியுள்ளவர்கள். அத்துடன், நெசவாளர் கூட்டுறவு வீட்டு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். நெசவாளர்களையும், விசைத்தறி தொழிலையும் பாதுகாக்க இந்த அரசு, அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.
