×

இலங்கையின் சிலாபம் நகரில் இருதரப்பினர் மோதல்: ஊரடங்கு உத்தரவு அமல்

கொழும்பு: இலங்கையின் கடற்கரை நகரான சிலாபத்தில் இரு தரப்பினர் இடையே நேற்று முன்தினம் நடந்த மோதலை அடுத்து, அங்கு இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தில் 3 தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்களில் என மொத்தம் 8 இடங்களில் நடந்த மனித குண்டு தாக்குதலில், 250 பேர் பலியாயினர். இச்சம்பவம் நடந்ததில் இருந்து இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் மீது, அங்குள்ள கிறிஸ்தவர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

இது அவ்வப்போது மோதலாகவும் வெடிக்கிறது. நீர்க்கொழும்பு பகுதியில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இடையே சில நாட்களுக்கு முன் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், இலங்கையில் கடற்ரை நகரமான சிலாபத்தில் நேற்று முன்தினம் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இங்கு கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ளனர்.  கிறிஸ்தவ பெண் ஒருவர், முஸ்லிம் ஒருவரின் கடையில் வைத்து மிரட்டப்பட்டதால் இந்த மோதல் தொடங்கியது. இதில், மசூதி ஒன்றும், முஸ்லிம்களின் 5 கடைகளும் தாக்கப்பட்டன. இச்சம்பவத்தையடுத்து சிலா நகரில் இன்று காலை வரை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இலங்கையில் மனித குண்டு தாக்குதல் நடத்தியவர்கள் ஒரு சிறு குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதால், முஸ்லிம்கள் அனைவரையும் சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டாம் என இலங்கை அதிபர் சிறிசேனா ஏற்கனவே வேண்டுகோள் விடுத்தார். நீர்க்கொழும்பு தாக்குதலுக்குப்பின் கொழும்பு கார்டினல் ரஞ்சித், கிறிஸ்தவர்களுக்கு விடுத்த வேண்டுகோளில், ‘‘முஸ்லிம்கள் நமது சகோதரர்கள், நமது மத கலாசாரத்தில் ஒரு அங்கம். அவர்களை புண்படுத்த வேண்டாம்’’ என கூறினார். இந்த வேண்டுகோள்களையும் மீறி இலங்கையில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இலங்கை மக்கள் தொகை 2 கோடியே 10 லட்சம். இவர்களில் முஸ்லிம்கள் 10 சதவீதம் பேர், கிறிஸ்தவர்கள் 7 சதவீதம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பிரார்த்தனை
இலங்கையில் கடந்த மாதம் 21ம் தேதி ஈஸ்டர் தினத்தில் தேவாலயங்களில் நடந்த மனித குண்டு தாக்குதலுக்குப்பின் நாடு முழுவதும் அனைத்து தேவாலயங்களிலும் வழக்கமான பிரார்த்தனைகள் ரத்து செய்யப்பட்டன. கொழும்பு ஆர்ச் பிஷப் கார்டினல் ரஞ்சித், கடந்த 2 வாரங்களாக நடத்திய தனிப்பட்ட பிரார்த்தனைகள் டிவி மூலம் ஒளிபரப்பப்பட்டது. தற்போது இயல்பு நிலை திரும்பியதால், ஞாயிற்றுக் கிழமையான நேற்று அனைத்து தேவாலயங்களிலும் வழக்கமான பிரார்த்தனைகள் தொடங்கின. இதை முன்னிட்டு அனைத்து தேவாலயங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேவாலய வளாகங்களுக்குள் எந்த வாகனமும் அனுமதிக்கப்படவில்லை.

Tags : conflict ,Sri Lanka ,Chilaw ,town , இலங்கை, சிலாபம் , இருதரப்பினர், மோதல், ஊரடங்கு உத்தரவு
× RELATED நாகை – இலங்கை இடையே மே 19-ல் கப்பல் போக்குவரத்து தொடக்கம்