×

வாரியம் தரமற்ற மின்கம்பங்களை தயாரிப்பதால் பல இடங்களில் நட்டவுடன் முறிந்து விழும் அவலம்

* தமிழக அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு
* தொமுச சார்பில் முதல்வருக்கு கடிதம்

சென்னை: தமிழக மின்சார வாரியம் தரமற்ற மின் கம்பங்களை தயாரித்து பயன்படுத்தி வருவதால், அவை நடப்பட்டவுடன் கீழே முறிந்து விழுவது அதிகரித்துள்ளது. இதனால் வாரியத் தொழிலாளர்கள் பணியாற்றுவதற்கு அச்சமடைவதுடன், அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் ஏராளமான மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான மின் இணைப்புகளுக்கு மின்சாரத்தை கடத்துவதில் கம்பங்களின் பங்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் சமீபகாலமாக தரமற்ற மின்கம்பங்கள் தயாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அவை நட்டவுடன் முறிந்து விழுவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு அதிகாரிகள் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பாக தொமுச சார்பில் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குத் தேவையான மின் கம்பங்கள் அரசின் கம்பம் கழகம் (பி.எஸ்சி போல் காஸ்டிங் யார்டு) மூலம் தயாரிக்கப்படுகிறது. சில ஆண்டுகளாக தேவையை விட குறைந்த மின் கம்பங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த புயலின் போது ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் சேதமடைந்தன. இதைப் போர்க்கால அடிப்படையில் சரி செய்ய, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்து மின் கம்பங்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டது.தரமற்ற மின் கம்பங்கள் பயன்படுத்தப்படுவதால் அடிக்கடி மின் கம்பங்கள் முறிந்து தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் அவினாசி கோட்டம் ஆர்.கே.நகர் பிரிவு அலுவலகத்திற்கு பழனிச்சாமி நகரில் உள்ள ஒரு வீட்டின் மீது சென்ற உயரழுத்த மின்சார கம்பிகள், கம்பங்கள் மாற்றி சாலையில் நடப்பட்டது. ஒரு சில மணி நேரத்திலேயே திடீரென முறிந்தது. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. காலை 9 மணி முதல் இரவு 10 வரை மின்சாரம் தடை ஏற்பட்டது. பிறகு புதிய மின் கம்பத்தை அப்புற படுத்தி, மீண்டும் நஞ்சப்பாநகர் பகுதியிலுள்ள பழைய கம்பத்தை நட்டு மின்சாரம் வழங்கினார்.கஞ்சம்பாளையம், ராதாநகர், கணபதிநகர், போயம்பாளையம், கங்காநகர் பிச்சம்பாளையம், பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 20 க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் முறிந்துள்ளது.
சொட்டமேடு, அம்மன் நகரிலுள்ள ஒரு வீட்டிற்கு புதிய இணைப்பு வழங்க புதிய கம்பம் நடப்பட்டது. அது அரை மணி நேரத்தில் முறிந்து வீட்டின் மீது விழுந்தது. பெருமாநல்லுர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சுமார் 30 க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் முறிந்துள்ளது. இதேபோல் வாவிபாளையம், பூலுவப்பட்டி,பாண்டியன் நகர், வேலம்பாளையம், வெங்கமேடு, சாமுண்டிபுரம், அனுப்பர்பாளையம், அவினாசி, திருமுருகன் பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 க்கும் மேற்பட்ட கம்பங்கள் முறிந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் கம்பங்கள் 8 முதல் 10 எம்.எம். திடம் கொண்ட ஆர்.டி.எஸ் இரும்பு கம்பிகளைக் கொண்டு தயாரித்தனர்.

இதற்கு உற்பத்தி செலவு அதிகம் ஏற்பட்டது. தற்போது, 4 முதல் 6 எம்.எம். திடம் கொண்ட ஜி.ஐ. கம்பிகள் மூலம் மட்டுமே, மின் கம்பங்கள் தயாரிக்கப்படுகிறது.இது தரம் குறைவாக உள்ளது. இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுவதுடன், விபத்துக்களும் ஏற்படுகிறது. இணைப்புகளுக்கு தேவையான கன்டக்டர், இன்சுலேட்டர், ஸ்டே கம்பி, கிராஸ் கம்பி உள்ளிட்ட பொருட்களை தனியார் உற்பத்தியாளர்கள், அரசு சார்பு நிறுவனங்களிடம் இருந்து டெண்டர் மூலம் மின் வாரியம் வாங்கி பயன்படுத்துகிறது.அவ்வாறு பெறப்படும் மின் உற்பத்தி பொருட்களை அரசு பரிசோதனை கூடங்களில் பரிசோதனை செய்த பின்னரே பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கப்படும். அப்போது அவற்றின் மின்கடத்தும் திறனை விட இருமடங்காக மின்சாரத்தை அதில் செலுத்தி பரிசோதிக்க வேண்டும். அப்போது தான் இடி, மின்னல் போன்ற சமயங்களில் கூடுதல் மின்சாரம் கடக்கும் போது இன்சுலேட்டர் வெடிக்காமல், கண்டக்டர்கள் அறுந்து கீழே விழாமல் இருக்கும். ஆனால் சோதனை செய்யப்படாமல் நேரடியாக பயன்பாட்டிற்கு வந்து விடுகிறது. இது குறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : board ,places ,generators , The board produces non-standard electrical wiring In many places, the fall is broken
× RELATED கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னையில் 188 இடங்களில் தண்ணீர் பந்தல்..!!