×

தமிழகத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 111 டிகிரி வெயில்

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 111.2 டிகிரி வெப்பம் அதிகமாக காணப்பட்டது. 16 இடங்களில் 100டிகிரிக்கும் அதிகமாக வெயில் வாட்டியது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி தொடங்கியது. அதற்கு பிறகு வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த நான்கு நாட்களாக வெப்ப காற்றும் வீசியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
 
மேலும் பகலில் மாலை 4 மணி வரை வெளியில் வர வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விட்டது. அந்த அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்தது. இருப்பினும், படிப்படியாக இந்த தாக்கம் குறையும் என்று கணிக்கப்பட்டது. தமிழகத்தில் நேற்று முன்தினம் நிலவிய வெப்ப சலனம் காரணமாக வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகி பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூரில் 90 மிமீ மழை பெய்தது.

மதுரை தல்லாகுளம் 50 மிமீ, தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி, திருமங்கலம் 40 மிமீ, நெய்வேலி, ஓசூர் 30 மிமீ, கரூர், பாலக்கோடு, 20 மிமீ, தளி, செஞ்சி, தாளவாடி, சூளகிரி, ஸ்ரீபெரும்புதூர், போளூர் 10 மிமீ மழை பெய்துள்ளது. இது தவிர காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, மதுராந்தகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. சென்னை புறநகர் பகுதியிலும் சில இடங்களில் இடியுடன் மழை பெய்தது. இதனால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் வெயிலின்தாக்கம் சற்று குறைந்துள்ளது. இந்நிலையில், திருத்தணியில் நேற்று அதிகபட்சமாக 111.2 டிகிரி வெயில் கொளுத்தியது. சென்னை நுங்கம்பாக்கம், ஏர்போர்ட் பகுதியில் 106 டிகிரி, வேலூர் 109 டிகிரி, பாளையங்கோட்டை 105 டிகிரி, நாகப்பட்டினம் 104 டிகிரி, பரங்கிப்பேட்டை 103 டிகிரி, காரைக்கால் 102 டிகிரி, திருச்சி, புதுச்சேரி 103 டிகிரி, சேலம் ஆகிய இடங்களில 101 டிகிரி வெயில் நிலவியது. மேலும் தமிழகத்தில் 16 இடங்களில் 100டிகிரிக்கு அதிகமாக வெப்பம் அதிகரித்து காணப்பட்டது.

Tags : Tamil Nadu , In Tamilnadu, maximum edifice , 111 degrees
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...