×

கர்நாடகாவில் முதல்வர் பதவி காலியில்லை : சித்தராமையா திட்டவட்டம்

ஹுப்பள்ளி: நான் மீண்டும் முதல்வராக வேண்டும் என்று எங்கள் கட்சி எம்எல்ஏகள் என்மீது வைத்துள்ள அன்பின் காரணமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். மாநிலத்தில் முதல்வர் பதவி தற்போது காலியில்லை என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறினார்.குந்தகோள் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் குசுமாவதியை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஹுப்பள்ளி விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, மக்களவை தேர்தலுக்கு பின் மாநில அரசியலில் மாற்றம் ஏற்படும் என்றும், மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்து பாஜ ஆட்சி அமையும், முதல்வராக எடியூரப்பா பதவியேற்பார் என்று ஆரூடம் கூறி வருகிறார்கள். அவர்கள் சொல்வது போல் எதுவும் நடக்காது. மக்களவை தேர்தலில் 20 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ்-மஜத கூட்டணி வெற்றி பெறும். சிஞ்சோளி மற்றும் குந்தகோள் ஆகிய இரு சட்டபேரவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை.

கடந்த ஒரு வாரமாக சில மீடியாக்களில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் என்னப்பட்டபின் முதல்வர் மாற்றம் ஏற்படும். குமாரசாமி பதவியில் இருக்க மாட்டார் என்று எழுதி வருகிறார்கள். மீடியாக்கள் என்ன நோக்கத்திற்காக இப்படி எழுதுகிறார்கள் என்பது புரியவில்லை. கடந்த ஓராண்டு கால மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி சிறப்பாக இயங்கிவருகிறது. முதல்வர் குமாரசாமி நல்லாட்சி வழங்கி வருகிறார். உண்மை இப்படி இருக்கும்போது, எப்படி முதல்வர் மாற்றம் ஏற்படும். மீடியாக்கள் நடுநிலையோடு செயல்பட வேண்டும். யாரோ சிலரை திருப்திப்படுத்துவதற்காக ஆட்சி மாற்றம் என்றெல்லாம் எழுதுவது சரியல்ல.

மாநில முதல்வராக நான் மீண்டும் பதவி வகிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் எம்பி பாட்டீல், எம்எல்ஏகள் எஸ்.டி.சோமசேகர், சுதாகர் உள்பட பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இது அவர்கள் என்மீது வைத்துள்ள அன்பின் காரணமாக சொல்வதாகும். மாநிலத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்து வருகிறது. முதல்வராக குமாரசாமி இருக்கும்போது, முதல்வர் பதவி எப்படி காலியாக இருக்கும். இல்லாத ஒன்று கிடைக்கும் என்று சொல்வது சரியல்ல. மேலும் கூட்டணி தர்மம் காக்கப்பட வேண்டுமானால் எங்கள் கட்சி தலைவர் ராகுல்காந்தியின் விருப்பம்போல், ஐந்தாண்டு முழு பதவி காலம் நிறைவு செய்வது தான் நியாயமானது. அந்த விஷயத்தில் நான் உள்பட கட்சி தலைவர்கள் உறுதியாக இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chief Minister ,Karnataka ,Siddaramaiah , Chief Minister of Karnataka,Siddaramaiah's proposal
× RELATED வறட்சி நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க...