×

சிஆர்பிஎப் வீரர் மாயமான வழக்கு பென்ஷனுக்கு விண்ணப்பிக்க மனைவிக்கு உத்தரவு

மதுரை: ரயிலில் சென்ற சிஆர்பிஎப் வீரர் மாயமானது குறித்த வழக்கை, வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற மறுத்த ஐகோர்ட் கிளை, அவரது மனைவி ஓய்வூதியம் கோரி விண்ணப்பிக்க உத்தரவிட்டது. நெல்லையை சேர்ந்த தெய்வக்கனி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், ‘‘எனது கணவர் அண்ணாதுரை (36), மத்திய ரிசர்வ் படை (சிஆர்பிஎப்) போலீசாக பணி புரிந்தார். விடுமுறைக்காக 2018ல் நெல்லை வந்தார். விடுமுறை முடிந்து, டெல்லியில் பணியில் சேர 2018, ஜூன் 29ல் ரயிலில் புறப்பட்டார். அதற்குப்பின் அவரைப் பற்றிய தகவல் இல்லை. போலீசார் வழக்கு பதிந்தனர். விசாரணையில் முன்னேற்றமில்லை. கணவரை ஆஜர்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்து, ‘‘விடுமுறைக்குப்பின் அண்ணாதுரை சண்டிகரில் பணியில் சேர உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர் அங்கு பணியில் சேரவில்லை. அவரது பை டெல்லி ரயில்வே ஸ்டேஷனில் கிடைத்தது. அதில் அவரது ஆதார், ஏடிஎம் கார்டு, அடையாள அட்டை இருந்தது. இதுகுறித்து மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டது. அவரது கணவர் மாயமானது பற்றி டெல்லி நபி கரீம் போலீசார் வழக்குப்பதிந்தனர். அண்ணாதுரையை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. கணவர் மாயமான 8 மாதத்தில் இருந்து குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை உள்பட இதர பலன்கள் கோரி மனுதாரர் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மனுதாரரின் கணவரை கண்டுபிடிக்க போலீசார் சிறந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இவ்வழக்கை வேறு அமைப்பின் விசாரணைக்கு மாற்ற வேண்டியதில்லை. மனுதாரர் ஓய்வூதியம் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும். அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணையில் முன்னேற்றம் குறித்து மனுதாரருக்கு போலீசார் தெரிவிக்க வேண்டும்” என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CRPF ,player , The CRPF player, Benshan, wife, orders
× RELATED சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை