×

லாட்டரி அதிபர் மார்ட்டினின் உதவியாளர் பழனிசாமி மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

சென்னை : லாட்டரி அதிபர் மார்ட்டினின் உதவியாளர் பழனிசாமி மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பழனிசாமியின் மகன் ரோஹின்குமார் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் சோதனை

கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் மார்ட்டின். இவர் லாட்டரி தொழில் செய்து வருவதுடன், ரியல் எஸ்டேட் தொழிலும் நாடு முழுவதும் செய்து வருகிறார். இதனிடையே மார்ட்டின் கணக்கில் காட்டாத பணம் வைத்திருப்பதாக வருமானவரி புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மார்ட்டினுக்கு சொந்தமாக நாடு முழுவதும் 70 இடங்களில் வருமான வரித்துறையினர் ஏப்ரல் 30ம் தேதி சோதனை நடத்தினர். லாட்டரி அதிபர் மார்டினை வருமான வரித்துறையினர் கொல்கத்தா விமான நிலையத்தில் வைத்து அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே வருமானவரி சோதனையில் அவரது தொழில் சம்பந்தமான பல்வேறு முக்கிய ஆவணங்கள் ஆய்வுக்காக பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது.

மார்ட்டின் உதவியாளர் பழனிசாமி மர்ம மரணம்

இது தொடர்பாக 2 நாட்கள் மார்ட்டின் உதவியாளர் பழனியிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் கோவை காரமடையில் பழனி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கோவை மாநகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் எதிரே குட்டையில் கடந்த மே 3ம் தேதி பழனியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, மார்ட்டினின் பணம் குறித்த விவரங்களை கூறியதால், காசாளர் பழனிசாமியை மார்டின் நிறுவனத்தினர் அடித்து கொலை செய்துள்ளதாக அவரது மனைவி சாந்தாமணி புகார் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரிய அய்யாவிடம் மனைவி சாந்தாமணி புகார் மனு அளித்தார்.

சிபிசிஐடி விசாரணை கோரி மனு தாக்கல்


இந்நிலையில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் உதவியாளர் பழனிசாமி மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை கோரி பழனிசாமியின் மகன் ரோஹின்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் வருமான வரித்துறை சித்ரவதை காரணமாகவே தந்தை மரணம் அடைந்ததாகவும் தமது தந்தை உடலில் காயம் இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் மனுவில் ரோஹின்குமார் புகார் அளித்திருந்தார். மேலும் தந்தையின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் பழனிசாமி உடலை தங்கள் தரப்பில் ஒரு மருத்துவரை வைத்து பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மகன் ரோஹின்குமார் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.இதையடுத்து பழனிசாமியின் மகன் ரோஹின்குமார் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Martin ,attorney ,High Court ,death ,Palanisamy ,CBI , CBCIT, Investigation, Punishment, Lottery, Chancellor, Martin, Assistant, Palanisamy, Death
× RELATED தபால் வாக்குப் பதிவு நடைமுறை தொடங்கி...