×

நூற்றாண்டு பாரம்பரிய கட்டிடங்கள் சேதமடைவதை தடுக்க நவீன யுக்தி மூலம் கட்டிடங்களில் வளர்ந்த செடிகளை அகற்ற முடிவு

45 நாட்களில் தானாக பட்டு போய் விடுகிறது
பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்

சென்னை: நூற்றாண்டு பாரம்பரிய கட்டிடங்கள் சேதமடைவதை தடுக்க நவீன யுக்தியை பயன்படுத்தி செடிகள் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழக பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவின் கட்டுபாட்டில் பள்ளிக்கல்வி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலம், உள்துறை, நீதிமன்றம், போக்குவரத்து, மீன்வளம், சமூக நலத்துறை உள்ளிட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பல்வேறு அரசு துறைகளின் கட்டிடங்கள் உள்ளன. இதில், சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள நூற்றாண்டு கட்டிடங்கள், உயர்நீதிமன்ற கட்டிடம், மாநில கல்லூரி கட்டிடம், விக்டோரியா மாணவர் விடுதி, சென்னை பல்கலை கட்டிடம் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பாரம்பரிய கட்டிடங்களும் அடக்கம். இந்த பாரம்பரிய கட்டிடங்களில் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், கட்டிடங்களில் ஆங்காங்கே செடிகள் முளைத்து காணப்படுகிறது. இந்த செடிகளால் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த கட்டிடங்களில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற முயற்சித்தால் கூட  கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்த செடிகளை கட்டிடங்களுக்கு சேதமில்லாமல் அகற்ற பொதுப்பணித்துறை முடிவு செய்தது. இதற்காக, பொதுப்பணித்துறையில் பாரம்பரிய கட்டிட பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் கல்யாணசுந்தரம் தலைமையில்  பொறியாளர்கள் குழுவினர் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது நவீன யுக்தியை பயன்படுத்தி செடிகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து முதற்கட்டமாக தற்போது சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள ஹூமாயூன் மகாலில் உள்ள செடிகளை அகற்றும் முயற்சி சோதனை அடிப்படையில் தஞ்சாவூரை சேர்ந்த ஒப்பந்த நிறுவனம் மூலம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் சார்பில் herbicide 2 4D என்ற மருந்தை கட்டிடத்தில் வளர்ந்த செடிகள் மீது ஊற்றப்பட்டுள்ளது.

இந்த மருந்து செடியின் வேர் வரை சென்று பரவுகிறது. பின்னர் 45 நாட்களில் அந்த செடிகள் தானாக பட்டு போய் விடும் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு அந்த செடிகளை கையால் எளிதாக அகற்றி விட முடியும் என்று  பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறும் போது, ஹூமாயூன் மகால் கட்டிடங்களில் செடிகள் வளர்ந்துள்ளது. இந்த செடிகளை அகற்ற முயன்ற போது கட்டிடத்திற்கு சேதம் ஏற்படும் நிலை உருவானது. அதன்பிறகு இது போன்று  மருந்தை பயன்படுத்தி செடிகளை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டோம். இந்த செடிகளில் ஊற்றப்படும் மருந்து வேர் வரை சென்று தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்பிறகு அந்த செடிகள் பட்டு போய் விடுகிறது. இந்த செடிகளை எளிதாக அகற்றி விட முடியும். இதன் மூலம் பாரம்பரிய கட்டிடங்களில்  எந்த வித சேதம் ஏற்படாமல் தடுக்க முடியும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : buildings , Centuries of traditional buildings, modern technique, buildings, and plants grown
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...