×

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் 4 மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை: செயல் அலுவலர்-உதவி ஆணையர் மோதல் போக்கு காரணமா?

சென்னை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் கடந்த 4 மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காததால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பாக அறநிலையத்துறை கமிஷனர் உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம்  பெரும்புதூரில் வல்லக்கோட்டை முருகன் கோயில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில், இளநிலை பணியாளர், எழுத்தர், மேலாளர், அர்ச்சகர், அர்ச்சனை டிக்கெட்  வழங்குபவர் என 40க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில், 22 பேர் நிரந்தர ஊழியர்கள் என்றும் மற்றவர்கள் தினக்கூலி பணியாளர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்  என்றால் கோயில் நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் காஞ்சிபுரம் மாவட்ட உதவி ஆணையரிடம் ஊதிய மாற்றத்துக்கான கையெழுத்து பெற்று அதன்பிறகு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியும்.

ஆனால், கோயில் நிர்வாக அலுவலர் சார்பில் ஊதிய மாற்றம் பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், கடந்த 4 மாதங்களாக கோயிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து ஊழியர்கள் கோயில் நிர்வாகத்திடம் கேட்டால் முறையான பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால், ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதில், தினக்கூலி பணியாளர்களுக்கு மாதம் ₹10 ஆயிரம் மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. 4 மாதங்களாக அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து கோயில் பணியாளர்கள் சிலர் கூறும் போது, ‘காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக வருவாய் வரக்கூடிய கோயில்களில் வல்லக்கோட்டை முருகன் கோயில் ஒன்று. இந்த கோயிலில் ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும்  கோயில் வளர்ச்சி பணி  உள்ளிட்ட அனைத்துக்கும் காஞ்சிபுரம் மாவட்ட உதவி ஆணையர் ரமணியிடம் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், கோயில் பணியாளர்கள் நியமன விவகாரம் தொடர்பாக கோயில் நிர்வாக அலுவலர்  சிந்துமதிக்கும், காஞ்சிபுரம் மாவட்ட உதவி ஆணையர் ரமணியும் மோதலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.  இதனால், உதவி ஆணையரிடம் கோயில் நிர்வாகம் சார்பில் எந்த விதமான கோப்புகளையும் அனுப்பி வைப்பதில்லை. இவர்களின் மோதல் போக்கு காரணமாக ஊழியர்கள் பலிகடா ஆக்கப்பட்டு விட்டனர். இந்த விவகாரத்தில்  அறநிலையத்துறை கமிஷனர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vallakottai Murugan ,conflict ,Action officer-assistant commissioner , Vallakottai Murugan Temple, Staff, Salary, Executive Officer, Assistant Commissioner, Conflict
× RELATED மாநிலங்களுக்கு இடையே மோதலை தூண்டும்...