×

திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளதால் சபாநாயகர் தனபால் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்: டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் மீது திமுக தரப்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அவரது நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலிடம் அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன், டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேருக்கு எதிராக புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி, விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன் மற்றும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு ஆகிய 3 பேரும் டிடிவி.தினகரனின் கட்சியான அ.ம.மு.க.வில் முக்கிய பொறுப்பில் உள்ளனர் என தெரிவித்ததோடு அதற்கான புகைப்பட ஆதாரங்களையும் அளித்துள்ளார். மேலும் சமீபத்தில் தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தல் ஆகியவற்றில் அமமுகவிற்கு ஆதரவாக பிரசாரத்திலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கொறடாவின் புகாரை அடிப்படையாக கொண்டு அதிமுகவில் இருந்து கொண்டு டிடிவி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட மேற்கண்ட எம்.எல்.ஏ.,க்கள் 3 பேரிடமும் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் கடந்த சில தினங்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், 3 பேரும் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என கடந்த 1ம் தேதி குறிப்பிட்டு சபாநாயகர் தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மூன்று எம்.எல்.ஏ.,க்களில் ரத்தினசபாபதி மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

அதில், “சபாநாயகர் தனபால் மீது தமிழகத்தில் எதிர்கட்சியான திமுக தரப்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அதிமுகவில் இருந்து கொண்டு டிடிவி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி எங்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகருக்கு கண்டிப்பாக அதிகாரம் கிடையாது. அதனால், இந்த விவகாரத்தில் 7 நாட்களுக்குள் நாங்கள் விளக்கமளிக்க வேண்டும் என்ற சபாநாயகர் தனபால் உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும். மேலும், இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரித்து உடனடியாக ஒரு இறுதி உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து மேற்கண்ட மனு வரும் திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Speaker ,DMK ,Dhanbad , DMK's non-confidence vote, TTV Dinakaran, MLA, Supreme Court,
× RELATED இந்தூர் காங்.வேட்பாளர் விலகியது...