×

போராட்டத்தில் ஈடுபட்டதால் மெட்ரோ ரயில் ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் சிறைவைப்பு

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் மெட்ரோ ரயில் ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் சிறைவைக்கப்பட்டனர். சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த வருடம் ஊழியர்கள் ஒன்றிணைந்து ‘மெட்ரோ ரயில் ஊழியர்கள் சங்கம்’ என்ற ஒன்றை ஆரம்பித்தனர். இதையடுத்து சங்கத்தில் உள்ள 8 பேரை மெட்ரோ ரயில் நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்தது. ஊழியர்களிடம் விளக்கம் கேட்டிருந்த மெட்ரோ ரயில் நிர்வாகம் கடந்த 27ம் தேதி 8 பேரையும் திடீரென பணிநீக்கம் செய்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனரிடம்  விளக்கம் கேட்க முற்பட்டனர். ஆனால், எந்தவித பதிலும் வராததால் அதிருப்தி அடைந்தனர். தொடர்ந்து நிர்வாகம் புறக்கணித்ததை அடுத்து, சுமார் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 29ம் தேதி தலைமை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர். போராட்டம் முற்றிய நிலையில், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. 2 நாட்களாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து 1ம் தேதி ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். நேற்று முன்தினம் வழக்கம் போல் பணிக்கு சென்ற ஊழியர்களுக்கு எந்தவித பணியும் வழங்காமல் நிர்வாகம் அலைக்கழித்துள்ளது.

இதேபோல், நேற்றும் காலை வழக்கம் போல் பணிக்கு வந்த ஊழியர்களில் போராட்டத்தில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஒரு தனி அறையில் அதிகாரிகள் சிறை வைத்தனர். இதனால், ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ஊழியர்கள், அதிகாரிகளிடம் கேட்டதற்கு ‘நீங்கள் எந்த வேலையும் செய்ய வேண்டாம். இந்த அறையில் இருந்தால் போதும். டியூட்டி முடிந்துவிட்டு செல்லும் போது நோட்டில் கையெழுத்து மட்டும் போட்டால் போதும். உங்களை வீட்டிற்கு செல்ல அனுமதிக்க முடியாது. டியூட்டி முடியும் வரை இந்த அறையில்தான் இருக்க வேண்டும்’ என்று கறாராக கூறியுள்ளனர். எனவே, அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர்.

இதுகுறித்து ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: சங்கம் தொடங்கிய காரணத்தினால் ஊழியர்கள் 8 பேரை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. இதை கண்டித்து போராடிய எங்கள் மீது மறைமுக தாக்குதலை நிர்வாகம் தொடங்கியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. எங்களை வேலைக்கு வரவைத்துவிட்டு பணி செய்ய விடாமல் சிறை வைத்துள்ளனர். இதனால் பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தை வாபஸ் பெற்ற பிறகும் ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து அடுத்தகட்ட போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : strike , More than 100 people,injured in the strike
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து