கொரட்டூர் பஸ் நிலையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பழுது: பயணிகள் தவிப்பு

அம்பத்தூர்: கொரட்டூர் பேருந்து நிலையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பழுதடைந்துள்ளதால் பயணிகள் தாகம் தணிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் பேருந்து  நிலையம் அமைந்துள்ளது. இதை வீட்டுவசதி வாரிய குடியிருப்பு,  சிவலிங்கபுரம், சீனிவாசபுரம், அக்ரகாரம், பாலாஜி நகர், குமரன் நகர், தில்லை நகர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.  இந்த பேருந்து நிலையத்தில் இருந்து, சென்னை மாநகர பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் அனைத்து வசதிகளுடன் கொரட்டூர் பேருந்து நிலையம் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டது. அப்போது பயணிகளின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் ₹10 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி பயணிகள் சுத்தமான குடிநீரை அருந்தி வந்தனர்.

ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால் இந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் சில மாதத்திலேயே பழுதானது. இதை சீரமைக்காமல் கைவிட்டனர். இதனால், சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் பயணிகளுக்கு பயன்படாமல் பூட்டி கிடக்கிறது. தற்போது கோடை வெயிலால் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். இதுகுறித்து பயணிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொரட்டூர் பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு  நிலையத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

More
>