×

சென்னை- நாகை இடையே 29ல் புயல் கரை கடக்கிறது தஞ்சை, கரூர், திருச்சி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை

திருச்சி: தஞ்சை, கரூர், திருச்சி மாவட்டங்களில் பலத்த  சூறைகாற்றுடன் மழை பெய்தது. தஞ்சையில் பல இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்து மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. துறையூரில் சூறைக் காற்றில் ஏராளமான வாழை மரங்கள் சேதமடைந்தன. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் அடுத்த சில நாளில் வலுப்பெற்று 29ம் தேதி புயலாக மாறும் என்றும், கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. சராசரியாக 100 டிகிரி வெயில் என்ற அளவில் தொடங்கி அதிகபட்சமாக 107 டிகிரி வரை வெயில் உச்சத்தை தொட்டுள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்குள் வெயிலின் கொடூர தாக்குதல் தொடங்கிவிட்டது.

இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தம் மேலும் வலுவடைந்து வருவதால் தென் தமிழகத்தில் சில மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்து வருகிறது.  தற்போது வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம் மேலும்  வலுவடைந்து வருகிறது. நாளை இந்த காற்றழுத்தம் மேலும் வலுவடைந்து  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதன் காரணமாக தென்  மாவட்டங்களில் மேலும் சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும். 29ம்  தேதி காற்றழுத்த  தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறும்.  புயலாக மாறும் பட்சத்தில் தமிழகம், புதுச்சேரி கடலோர  மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து உள்ளது.இதன் முன்னோட்டமாக  நேற்று இரவு முதல் வங்கக் கடலில் மணிக்கு 40  முதல் 50 கிமீ வேகத்தில்  காற்று வீசத் தொடங்கியுள்ளது.  சில இடங்களில் கடல் சீற்றம்  காணப்படுகிறது. வங்கக் கடலில் தென் கிழக்கு பகுதியில்  காற்றழுத்தம் நிலை கொண்டு இருப்பதால் அது வட மேற்கு திசையில்  நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயலாக மாறும் போது  சென்னை-நாகப்பட்டினம் இடையே கரை கடக்கக் கூடும் என்பதால் சென்னை,  கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில்  புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1, 2 ஏற்றப்பட்டுள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது. சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இது தவிர தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் 10 மிமீ அளவுக்கு மழை பெய்துள்ளது.

தஞ்சையில் நேற்றுகாலை முதல் வெயில் கொளுத்தியது. பிற்பகலில் மழை  பெய்வதற்கான அறிகுறியுடன் திடீரென பலத்த காற்று வீசியது. இதனால்  தஞ்சை-நாஞ்சிக்கோட்டை சாலை பிரகதாம்பாள் நகரில் மின்கம்பி அறுந்து வீதியில்  விழுந்தது. அந்த நேரத்தில் யாரும் அந்த வழியாக செல்லாததால் எந்தவித  அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. பொதுமக்கள் தகவல் கொடுத்ததால் அந்த  வழியே செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.  மின்வாரிய ஊழியர் வந்து  மின்கம்பியை மாற்றினார். பலத்த காற்றினால் தஞ்சை நகரில் சில இடங்களில்  மரக்கிளைகள் முறிந்து கீழே விழுந்தன. தஞ்சையில் நேற்றும் மழை பெய்யாமல்  மக்களை ஏமாற்றியது. கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.  நாச்சியார்கோயில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் 20க்கும் மேற்பட்ட முருங்கை மரங்கள் முறிந்து விழுந்தது.

போதிய வெளிச்சம் இல்லாததால் வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றனர். இந்த மழையால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது. இந்த மழை பருத்தி செடிகளுக்கும், உளுந்து பயிர் உள்ளிட்ட அனைத்து வகையான பணப்பயிருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது அப்போது காவேரி நகர் அறிஞர் அண்ணா மண்டபம் அருகே காற்றின் வேகம் தாங்காமல் தென்னை மரம் ஒன்று சாய்ந்தது.  அதனால் அப்பகுதியில் உள்ள மின் கம்பங்கள் வயல்களில் விழுந்ததால் தொடர்ந்து மூன்று மின் கம்பங்கள் சாய்ந்து கீழே விழுந்தது. அப்போது தீப்பொறி ஏற்பட்டது. இதனால் தகவலறிந்த முசிறி தீயணைப்பு துறையினர் வந்து சேதமடைந்த மின் கம்பங்களை அகற்றினர். இந்நிலையில் காற்றில் தென்னை மரம் முறிந்து விழுந்ததில் காவேரி நகர் பகுதியைச் சேர்ந்த குணசீலன்  (70) பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல்  மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றுமாலை மழை பெய்தது.திருச்சி மாவட்டம் துறையூர் , உப்பிலியபுரம்  மற்றும் துறையூர் சுற்றுவட்டார பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு பலத்த சூறை  காற்றுடன் மழை  பெய்தது. துறையூர் கடைவீதியில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பர  பாதகைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டது.  இதுபோல் உப்பிலியபுரம் பகுதியில் கொப்பம்பட்டி செல்லும் சாலையில் பலத்த  சூறை காற்றுக்கு புளியமரம் வேரோடு சாலையின் நடுவே விழுந்து. இதனால் போக்குவரத்து  பாதிப்பு ஏற்பட்டது. உடனே சாலை பணியாளர்கள் புளியமரத்தை அகற்றினர்.  துறையூர் அருகே சிங்கலாந்தபுரத்தில் நேற்றுமாலை சூறைகாற்றில்  வாழைத்தாருடன் 600 வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. இதனால் பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கண்ணீர் விட்டனர். திருச்சி மாநகர பகுதிகளில் பல இடங்களில் மழை பெய்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,Chennai ,Nagapattinam ,districts ,Karur ,Trichy ,Thanjavur , Chennai - Nagai, Storm, Tanjore, Karur, Trichy, Rain
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...