×

கோவை மக்களவை தொகுதி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் முடங்கிய சிசிடிவி கேமராக்கள்: தேர்தல் அதிகாரிகள் விசாரணை

கோவை: கோவை மக்களவை தொகுதி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் இயங்காதது தொடர்பாக விசாரணை நடக்கிறது. கோவை மாவட்டத்தில் கோவை மக்களவை தேர்தலுக்கான ஓட்டு பதிவு கடந்த 18ம் தேதி முடிந்தது. 2,045 ஓட்டு சாவடிகளில் 2,605 ஓட்டு பதிவு மெஷின் பயன்படுத்தப்பட்டது. இந்த ஓட்டு பதிவு மெஷின், கட்டுப்பாட்டு கருவிகள், சின்னம் காட்டும் கருவிகள் மற்றும் ஆவணங்கள் போன்றவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி) வைக்கப்பட்டது.

கோவை தொகுதியில் பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளது. இந்த 6 தொகுதிகளுக்கு தனித்தனியாக 6 பாதுகாப்பு அறை (ஸ்ட்ராங்க் ரூம்) அமைக்கப்பட்டு, அதில் ஓட்டு மெஷின் உள்ளிட்ட ஆவணங்கள் வைக்கப்பட்டது. 6 ஸ்ட்ராங்க் ரூம் மற்றும் வளாகங்களை கண்காணிக்க, 144 இடத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது.

கல்லூரி வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட போலீசார் கொண்ட 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று காலை 9 மணிக்கு கோவை வடக்கு தொகுதி ஸ்ட்ராங்க் ரூம் தவிர மற்ற 5 ஸ்ட்ராங்க் ரூம் வளாகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் இயக்கம் முடங்கியது. கட்டுப்பாட்டு அறையில் இருந்த திரையில் வீடியோ கேமரா காட்சி தெரியாததால் பதற்றமடைந்த வேட்பாளர்களின் ஏஜென்ட்டுகள் தேர்தல் பிரிவில் புகார் அளித்தனர்.

இதை தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரியான கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் மற்றும் கண்காணிப்பு கேமரா தொழில் நுட்ப குழுவினர் ஸ்ட்ராங்க் ரூம் பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர். 6 மணி நேரமாக பணிக்குபின் கேமராக்கள் செயல்பட வைக்கப்பட்டது. அதிகாரிகள் விசாரித்த போது, நேற்று முன்தினம் இரவு இடியுடன் மழை பெய்தது. அதனால் வீடியோ கேமராக்கள் பழுதானது தெரியவந்தது.

எனினும் ஸ்ட்ராங்க் ரூம் கேமராக்கள் முடங்கியதில் விதிமுறை மீறல் இருப்பதாக வேட்பாளர்களின் ஏஜன்டுகள் சந்தேகம் எழுப்பினர். இதனால், தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கோவை மாவட்ட நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினர். கண்காணிப்பு கேமரா இயக்கம் தொடர்பான பணி தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் விசாரித்து வருகின்றனர். ஆனால், இதுதொடர்பாக விரிவாக விசாரணை நடத்தவேண்டும் என ஏஜென்டுகள் வேண்டுகோள் வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CCTV ,seat count center ,Lok Sabha ,Coimbatore ,Election , Coimbatore, Lok Sabha constituency, vote count, CCTV camera, election officials, investigation
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...