×

பொன்னமராவதியில் இயல்பு வாழ்க்கை திரும்பியதால் 40 ஊராட்சிகளில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ்

புதுக்கோட்டை: பொன்னமராவதி மற்றும் அதை சுற்றியுள்ள 40 ஊராட்சிகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இயல்புநிலை திரும்பியதை அடுத்து 144 தடை உத்தரவை வாபஸ் பெறுவதாக புதுக்கோட்டை ஆட்சியர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார்.

பொன்னமராவதி பகுதியில் கலவரம்


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் உள்ள ஒரு சமூகத்தினரை பற்றி தவறாக சித்தரித்தும், அந்த சமூக பெண்கள் பற்றி தரக்குறைவாக பேசியும் வாட்ஸ் அப்பில் ஒரு ஆடியோ வைரலானது. இதனால், பொன்னமராவதியில் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி பொன்னமராவதி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது, அவதூறு பரப்பியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து பொன்னமராவதியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வரும் அந்த சமூகத்தினர் கடைகளை அடைக்கும்படி கூறி போராட்டம் நடத்தினர். இதன்பின், 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பெண்கள் துடைப்பத்துடனும், ஆண்கள் கம்புகள் எடுத்துக்கொண்டும் ஊர்வலமாக பொன்னமராவதி காவல் நிலையம் முன் வந்து அவதூறு பரப்பியவர்களை கைது செய்யவில்லை எனக்கூறி போராட்டம் நடத்தினர்.

இதனால் காவல்நிலையத்தை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது, மக்கள் காவல் நிலையம் மற்றும் போலீஸ் வாகனங்கள் மீது சரமாரி கற்களை வீசினர். இதில் 3 போலீஸ்காரர்கள் படுகாயமடைந்தனர். 7 வாகனங்கள், 2 பஸ்கள் சேதமடைந்தது. அப்போது கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் ஒரு முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மேலும், தடியடி நடத்தினர். இதனால் அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் அந்த சமூகத்தை சேர்ந்த 10 பேர் காயமடைந்தனர்.

144 தடை உத்தரவு:

இந்த சம்பவம் தொடர்பாக, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி மற்றும் மத்திய மண்டல ஐஜி வரதராஜூ, திருச்சி சரக டிஐஜி லலிதாலட்சுமி ஆகியோருடன் காவல் நிலையத்தில் போராட்டக்காரர்களின் முக்கிய நிர்வாகிகளுடன் பேசினார்.

இதன்பின், செய்தியாளர்களிடம் கலெக்டர் கூறுகையில், ‘‘ஒரு சமூகத்தினரை இழிவாக பேசி வாட்ஸ்அப்பில் பதிவிட்ட விஷமிகளை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதமாக, பொன்னமராவதி தாலுக்காவுக்குட்பட்ட 42 ஊராட்சிகளுக்கு  உட்பட்ட 50 கிராமங்களில் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை 3 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த ஒரு பஸ் மற்றும் வாகன போக்குவரத்து இருக்காது. 3 நாட்களுக்கு பின் சகஜ நிலை திரும்பிய பின் போக்குவரத்திற்கு வழிவகை செய்யப்படும்’’ என்றார்.

144 தடை உத்தரவு வாபஸ்

இந்நிலையில் பொன்னமராவதி மற்றும் அதை சுற்றியுள்ள 40 ஊராட்சிகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. கடந்த சனிக்கிழமை பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக  அடையாளம் தெரியாத 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது .இதைத் தொடர்ந்து நேற்று வழக்கம் போல் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. பேருந்துகள் இயக்கப்பட்டன. மக்கள் வழக்கம்போல் பணிகளை தொடர்ந்தனர். இதனால் நேற்று நள்ளிரவு 12 மணியிலிருந்து 144 தடை உத்தரவை வாபஸ் பெறுவதாக புதுக்கோட்டை ஆட்சியர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார். இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ponnaravaruwa , Poonamaravathi, Default, Pudukottai Collector, Uma Maheswari, 144 ban, orders, withdraw
× RELATED கலெக்டர் தகவல் பொன்னமராவதியில் அரசு கல்லூரி துவங்கப்படுமா?