×

தேர்தல் பறக்கும் படையினர் பணம் பறிமுதல் செய்தால் டாஸ்மாக் உதவி செய்யாது: நிர்வாகம் எச்சரிக்கை

சென்னை:  மாவட்ட மேலாளர்கள், கடை மேற்பார்வையாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அனுப்பியுள்ள உத்தரவு:நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைளுக்கு 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. 15ம் தேதி இரவு 10 மணிக்கு கணக்கு முடித்து, மதுபான கடை மற்றும் மதுக்கூடங்களை பூட்டி சீல் வைக்க வேண்டும். 16ம் தேதி அன்று காலை 12 மணிக்குள், 15ம் தேதியன்று நடைபெற்ற விற்பனைத்தொகையை உரிய வங்கியில் டாஸ்மாக் கணக்கில் செலுத்த வேண்டும். 16ம் தேதி வங்கிக்கு செல்லும்போது பூர்த்தி செய்த வங்கி சலான், விற்பனை விவர புத்தகம், பில்புக், அடையாள அட்டை ஆகியவற்றை உடன் எடுத்துச்செல்ல வேண்டும்.

மேலும், வங்கி கணக்கில் செலுத்த செல்லும்போது தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் பறக்கும் படை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டார்கள் எனில் பில்புக், சிட்டை, விற்பனை விவர புத்தகம், அடையாள அட்டை மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட வங்கி சலான் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு உரிய ஆவணங்கள் இல்லாமல் செல்லும் போது விற்பனைத்தொகையை தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தால் டாஸ்மாக் நிர்வாகம் எந்தவித உதவியும் செய்ய இயலாது. விற்பனை தொகையை வங்கியில் செலுத்தாத பட்சத்தில் பணியாளர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கையாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுவார்கள். எனவே, மிகவும் கவனமாக பணிபுரிய தெரிவிக்கப்படுகிறது. விடுமுறை தினங்களில் கடையில் உள்ள மதுபானங்கள் திருட்டு ஏற்படாதவண்ணம் பாதுகாப்பாக கண்காணிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. வங்கியில் தொகை செலுத்தியபின் மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Taskmill , Election, Fly Soldiers, money , Admin Warn
× RELATED அனுமதியின்றி டாஸ்மாக் மதுபானம் விற்றவரிடம் விசாரணை