×

2 ஆண்டாக புதுப்பிக்காமல் இயங்கிய சூப்பர் மார்க்கெட் உணவு பொருள் குடோனுக்கு தொழில் உரிமம் ரத்து

சென்னை: திருவேற்காட்டில் 2 ஆண்டாக புதுப்பிக்காமல் இயங்கிய தனியார் சூப்பர் மார்க்கெட் உணவு பொருள் குடோனுக்கு தொழில் உரிமத்தை ரத்து செய்து  உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னையில் பல்வேறு இடங்களில் இயங்கி வரும் தனியார் சூப்பர் மார்க்கெட்களுக்கு வேண்டிய காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் என பல்வேறு பொருட்களையும் தேக்கி வைக்கும் பெரிய அளவிலான குடோன் திருவேற்காடு அடுத்த நூம்பல் பகுதியில் உள்ளது. கிரேஸ் என்ற பெயரில் இயங்கும் இந்த குடோனில் ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  சமீபத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மேற்கண்ட குடோன் மற்றும் அதன் அலுவலகத்தை சோதனை செய்தனர். அப்போது, இந்த குடோனுக்கு கடந்த 2017ம் ஆண்டுக்கு பிறகு தொழில் உரிமம் புதுப்பிக்கப்படாதது தெரியவந்தது. இதுகுறித்து விளக்கம் கேட்டு, குடோன் உரிமையாளருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

ஆனால், மேற்கண்ட குடோன் உரிமையாளர் இதுவரை உரிய விளக்கம் அளிக்கவில்லை, எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, திருவள்ளுர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கவிக்குமார் தலைமையிலான அதிகாரிகள், நேற்று மேற்கண்ட குடோனுக்கு வந்து, அதன் தொழில் உரிமத்தை ரத்து செய்து, நோட்டீஸ் ஒட்டினர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி கூறுகையில், ‘இந்த குடோனுக்கு 2017க்கு பிறகு தொழில் உரிமம் புதுப்பிக்கவில்லை. இதனால் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பலமுறை நோட்டீஸ் கொடுத்தும் பதில் ஏதும் கொடுக்காததால் இன்று (நேற்று) ஆய்வு செய்து தொழில் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால்   இவர்கள் தொழிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

 அடுத்து உரிமத்தை புதுப்பிக்கும் வரை உணவு தொழில் புரிய தடை விதிக்கப்பட்டது. புதிய உரிமம் கிடைத்த பிறகு தொடங்கலாம். மேலும் உற்பத்தி செய்கிறவர்கள் மே 31க்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாததால் இவர்களுக்கு ₹68 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில் உரிமம் புதுப்பிக்காமல் இயங்கினால் இந்த குடோன் பூட்டி சீல் வைக்கப்படும்’’ என்றார். இந்த நடவடிக்கை காரணமாக, தற்போது இந்த சூப்பர் மார்க்கெட் குடோனில் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தொழில் உரிமம் புதுப்பிக்காதவர்கள் உடனே புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Good Market Food , Supermarket, cancellation of food means, cancellation
× RELATED சேலத்தில் வீட்டு பூட்டை உடைத்து...