×

பொன்.ராதாகிருஷ்ணன் பேசுவதற்காக முக்கிய நபர் என் செல்நம்பரை கேட்டார்: டி.டி.வி. தினகரன் மீண்டும் அதிரடி

நாகர்கோவில்: மக்களவை தேர்லில் அதிமுகவுடன் கூட்டணி  வைத்து கன்னியாகுமரி உள்பட 5 தொகுதிகளில் பாஜ போட்டியிடுகிறது.  கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மதசார்பற்ற கூட்டணி காங்கிரஸ் கட்சி  சார்பில் எச்.வசந்தகுமார், பா.ஜ., சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன், அமமுக  சார்பில் லெட்சுமணன் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். இந்த நிலையில்  அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டே பாஜக தரப்பில் தங்களுக்கு தூது  அனுப்பப்பட்டதாக அமமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பரபரப்பு  தகவலை வெளியிட்டிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர் ‘பாஜக  மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மூலமாக கன்னியாகுமரியில்  போட்டியிடும் பாஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் எனக்கு தூது  அனுப்பியிருந்தார். திருநெல்வேலி, கன்னியாகுமரி தொகுதிகளில் அமமுக சார்பாக  சிறுபான்மையினரை நிறுத்த பாஜ எங்களை அணுகியது. ஆனால் நாங்கள் பொன்னாரை இதுவரை நேரடியாக  சந்திக்கவும் இல்லை. தொடர்பு கொண்டு பேசவும் இல்லை.

கருப்பு  முருகானந்தம் எனது சொந்த மாவட்டமான திருவாரூரைச் சேர்ந்தவர். அந்த வகையில்  அவர் தொடர்பு கொண்டார். சிறுபான்மை வேட்பாளரை நிறுத்தாவிட்டாலும்  பரவாயில்லை. கன்னியாகுமரியில் பலவீனமான வேட்பாளரை அமமுக சார்பாக  நிறுத்துமாறு தொடர்ந்து பாஜ நெருக்கடி கொடுத்தது. இது போல பல்வேறு  நிர்ப்பந்தங்கள் எனக்கு பாஜ தரப்பில் இருந்து வந்து கொண்டு  இருக்கிறது’ என்று கூறியிருந்தார்.
இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை  ஏற்படுத்தியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் வேட்பாளர்  எச்.வசந்தகுமார், ‘பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தோல்வி பயம். கன்னியாகுமரி மக்களவை  தொகுதியில் அவர் ஈசியாக ஜெயிக்க வேண்டும். எனவே பலமிழந்த ஒருவரை நீங்கள்  வேட்பாளராக போட வேண்டும். அப்படி போட்டால் நான் எளிதாக வெற்றிபெறுவேன் என்ற  நிலையை எடுத்துள்ளார். இது தவறான முன்னுதாரணம். சாதாரணமாக ராதாகிருஷ்ணன்  எதனையும் சரியாக செய்வதில்லை. எனவே இதனையும் தவறாக செய்துள்ளார். அரசியல்  என்றால் போர்க்களத்தில் நாம் சந்திக்க வேண்டும். வீட்டிற்குள் சந்திப்பது  அரசியல் அல்ல. எனவே பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தலில் இருந்து வாபஸ் வாங்க  வேண்டும் என்பதே எனது கருத்து’ என்றார்.

இதற்கிடையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த சுவாமிமலையில் அமமுக துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாஜகவை  சேர்ந்த கருப்பு முருகானந்தம் என்பவரை நான் பார்த்ததுகூட கிடையாது. அவர்  யாரென்றே எனக்கு தெரியாது. பொன்.ராதாகிருஷ்ணன் பேச வேண்டும் என்று எங்கள்  வேட்பாளர் எஸ்.காமராஜிடம் எனது செல்போன் நம்பரை பாஜகவை சேர்ந்த கருப்பு  முருகானந்தம் கேட்டுள்ளார். இதுபற்றி அவர் என்னிடம் கேட்டார். நான்  என்னிடம் கேட்காமல் செல்போன் நம்பர் தர வேண்டாம் என்று கூறிவிட்டேன்.  அதன்பிறகு எனது உதவியாளர் ஜனாவிடம் கருப்பு முருகானந்தம் பேசியுள்ளார்.
அதில் கன்னியாகுமரியில் கிறிஸ்தவரையும், திருநெல்வேலியில் இஸ்லாமியரையும்  வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் என்று கூறியதாக தெரிவித்தனர் என்றார்.  ஆனால் நான் பாஜவை சேர்ந்தவர்களிடம் அணுகினேன் என்று கருப்பு முருகானந்தம்  பேசியுள்ளார்.

 இப்போது ஜனாவிடம் பேசியதை கருப்பு முருகானந்தம் ஒப்புக்  கொள்கிறார். பொன்.ராதாகிருஷ்ணன் பேச வேண்டும் என்று கருப்பு முருகானந்தம்  செல்போன் நம்பர் கேட்டது உண்மை. இதை வெளியில் சொல்வது நாகரிகம் இல்லை  என்கிறார்கள். இன்னொரு கட்சியில் இஸ்லாமியரை, கிறிஸ்தவரை வேட்பாளராக  நிறுத்துங்கள் என்று சொல்வது மட்டும் நாகரீகமா...?. இதை நான் வெளியில்  சொல்வது தவறு என்று கூறுவது தமிழ்நாட்டில் புதுவிதமான நாகரீகம்.  பொன்.ராதாகிருஷ்ணன், இன்னொரு முக்கிய நபர் மூலமாக என்னுடைய செல்போன் நம்பரை  கேட்டார். அவரது பெயரை சொல்லமாட்டேன். நாடாளுமன்ற தேர்தல் மற்றும்  இடைத்தேர்தல்களில் ஆர்.கே.நகர் பார்முலாவான ரூ.20 கிடையாது. மக்கள் விரோத  ஆட்சியான மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி முடிவுக்கு வருவதற்கு  காரணமாக நாங்கள் இருப்போம். அதிமுக மாபெரும் தோல்வியடையும். தேர்தலுக்கு  பிறகு இந்த ஆட்சி கலைந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

பொய் சொல்கிறார்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
டிடிவி  தினகரன் பேட்டி தொடர்பாக கருத்து தெரிவித்த கருப்பு முருகானந்தம், ‘டிடிவி  தினகரனை தொடர்பு கொண்டது உண்மைதான், அதற்கும் இந்த வேட்பாளருக்கும்  தொடர்பும் இல்லை. நான் எதற்காக பேசப்போகிறேன் என்பதை ஊகித்துக்கொண்டுதான்  இந்த குற்றச்சாட்டை அவர் கூறியுள்ளார்’ என்று பதில் அளித்திருந்தார். இந்தநிலையில் ‘பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியில் இருந்து வாபஸ் பெற வேண்டும்? என்று  வசந்தகுமார் கூறுகிறாரே? என்று பொன்.ராதாகிருஷ்ணனிடம் நிருபர்கள் கேட்டதற்கு ‘அவர் தோல்வியை உணர  ஆரம்பித்துள்ளார். தங்களுக்கு தோல்வி என்பதை உணர ஆரம்பித்து அவர்களாகவே  சென்றால் சென்றுவிடட்டும் என்று வேண்டுகிறார் என்று நினைக்கிறேன். அவர்  பேட்டியை (டிடிவி தினகரன்) நான் முழுக்க பார்க்கவில்லை. அதற்கு கருப்பு  முருகானந்தம் என்ன சொன்னார் என்று தெரியாமல் நான் ஏதும் சொல்ல முடியாது’  என்று பதில் அளித்தார்.

பின்னர் இது குறித்து நேற்று பொன்.ராதாகிருஷ்ணன்  திருநந்திக்கரை பகுதியில் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆயிரம் பொய் சொல்லி  கல்யாணம் செய்வது போல் 10 ஆயிரம் பொய் சொல்லி எலெக்‌ஷனை முடிக்க முடியுமா?  என்று டிடிவி தினகரன் பார்க்கிறார்’ என்றார். பா.ஜ. கூட்டணி முயற்சி  தோல்வியில் முடிந்ததால் இவ்வாறு பேசினாரா? என்று கேட்டதற்கு ‘அதனை  அவரிடம்தான் கேட்க வேண்டும்’ என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : speech ,Ponnathirakrishnan ,DDV Dinakaran , Ponnathirakrishnan, TTV Dinakaran
× RELATED சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி