×

தேர்தல் பறக்கும் படையினர் வந்த வாகனம் விபத்தில் சிக்கி போலீஸ்காரர் பலி; 6 பேர் காயம்

சென்னை:கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி தாலுகா, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி, ஆரணி பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் 3 குழுக்களாக பிரிந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 7 பேர் கொண்ட பறக்கும் படையினர் ஆரணி பெரியபாளையம் பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். சோதனை முடிந்து நேற்று அதிகாலை 3 மணியளவில் ஆரணியில் இருந்து புதுவாயல் செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்தனர். புதுவாயல் டாஸ்மாக் கடை அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோர புளியமரத்தில் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே வெங்கல் காவல்நிலைய போலீஸ்காரர் கோவிந்தசாமி (54) பரிதாபமாக இறந்தார்.

கார் டிரைவர் கண்ணன் (48), தேர்வழி பகுதியை சேர்ந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் (44), ஊத்துக்கோட்டை காவல் நிலைய போலீஸ்காரர் கமலநாதன் (37), வெங்கல் காவல் நிலைய போலீஸ்காரர் லாசர் (54), பெண் காவலர் இந்துமதி (21), போட்டோகிராபர் அஜித் (20) ஆகியோர் காயமடைந்தனர். இதில், குணசேகரன், கமலநாதன் வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், மற்றவர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்து வந்த கவரப்பேட்டை போலீசார், கோவிந்தசாமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க திடீரென ஜீப்பை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் விபத்து குறித்து விசாரித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : policeman ,vehicle crash , Election flying force, vehicle, accident, policeman, kills
× RELATED டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது...