×

14 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 24 மாதம் சிறையில் இருந்தால் ஜாமீன் கொடுக்க வேண்டுமா?: உச்ச நீதிமன்றத்தில் லாலு மனு தள்ளுபடி

புதுடெல்லி: லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ரூ.900 கோடி கால்நடை தீவன ஊழல் தொடர்பான 3 வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளார். தற்போது, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிர்சாமுண்டா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். தனது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் தனக்கு ஜாமீன் வழங்கும்படி அவர் தாக்கல் செய்த மனுவை ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது லாலுவுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், லாலுவின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, லாலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், ‘‘மனுதாரரிடம் இருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. சதியின் காரணமாக அவர் குற்றவாளியாகி விட்டார். 24 மாதங்களாக அவர் சிறையில் இருந்து வருகிறார். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’’ என வாதிட்டார். இதை கேட்ட நீதிபதிகள், ‘‘14 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் 24 மாதம் சிறையில் இருந்தது பெரிதல்ல. நாங்கள் வழக்கின் தன்மை குறித்து விசாரிக்கவில்லை. ஜாமீன் மனுவை மட்டும்தான் தற்போது விசாரிக்கிறோம். அவருக்கு ஜாமீன் வழங்க எந்த முகாந்திரமும் இல்லை’’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Lalu ,Supreme Court , bail, imprisonment, Lalu, Supreme Court
× RELATED லாலு மருமகனுக்கு சீட் ஒதுக்கிய...