×

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பயிற்சியாளராக கிரகாம் ரீட் நியமனம்

பெங்களூரு: இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரகாம் ரீட் நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த உலக கோப்பை தொடருக்குப் பின்னர், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஹரேந்திரா சிங் அதிரடியாக நீக்கப்பட்டார். அதன் பிறகு 4 மாதங்களாக புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படாமல்  இருந்த நிலையில், இந்திய விளையாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து ஆஸி. அணி முன்னாள் வீரர் கிரகாம் ரீட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்காக 130 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ரீட் (54 வயது) 36 கோல் அடித்துள்ளார். 1992ல் பார்சிலோனாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அணியிலும், சாம்பியன்ஸ்  டிராபி தொடரை 4 முறை வென்ற (1984, 1985, 1989, 1990) ஆஸி. அணியிலும் இடம் பெற்றவர். பிரபல பயிற்சியாளர் ரிக் சார்ல்ஸ்வொர்த்திடம் உதவியாளராக செயல்பட்டுள்ளார்.2020 டிசம்பர் வரை இவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பார் என ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது. அடுத்த மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று விளையாட உள்ள தொடரே, கிரகாம் ரீட் சந்திக்கும்  முதல் சவாலாக இருக்கும். அதைத் தொடர்ந்து ஜூன் மாதம் புவனேஸ்வரில் நடைபெறும் எப்.ஐ.எச் ஆண்கள் சீரீஸ் பைனலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Graham Reid ,Indian , Indian men's, hockey, coach Graham ,appointed
× RELATED தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள்...