அடுத்த கடற்படை தளபதி விவகாரம் மத்திய அரசின் முடிவை எதிர்த்து துணை தளபதி விமல் வழக்கு

புதுடெல்லி :  பதவி மூப்பின் அடிப்படையில் நான் புதிய தளபதியாக வேண்டிய நிலையில், தன்னை ஒதுக்கிவிட்டு கடற்படையின் புதிய தளபதியாக கரம்பீர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்’’ என்று துணை தளபதி விமல் வர்மா ராணுவ தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கடற்படை தளபதியாக இருக்கும் சுனில் லம்பாவின் 3 ஆண்டு பதவிக் காலம் வரும் மே 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து, புதிய தளபதியை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை நடந்தது. இதில் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் முதன்மை கடற்படை தளம் என பெயர் பெற்ற விசாகப்பட்டினத்தை தலைமையகமாக கொண்ட கிழக்கு கடற்படை மண்டலத்தின் தலைவராக இருக்கும் கரம்பீர் சிங், கடற்படை துணை தளபதி ஜி.அசோக் குமார், மேற்கு கடற்படை தலைவர் அஜித் குமார், தெற்கு கடற்படை தலைவர்  அனில் குமார் சாவ்லா ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியாக கரம்பீர் சிங் தேர்வு செய்யப்பட்டு, மே 31ம் தேதி பொறுப்பேற்க இருப்பதாக, கடந்த 23ம் தேதி மத்திய பாதுகாப்புத் துறை அறிவித்தது.

இந்நிலையில், டெல்லியில் செயல்படும் ராணுவ தீர்ப்பாயத்தை அணுகிய துணை தளபதி விமல் வர்மா இதுகுறித்து மனு தாக்கல் செய்தார். அதில், பதவி மூப்பின் அடிப்படையில் நான்தான் கடற்படையின் அடுத்த தலைமை தளபதியாகி இருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு என்னை புறக்கணித்துவிட்டு, கரம்பீர் சிங்கை புதிய தளபதியாக தேர்ந்தெடுத்துள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நடந்த தலைமை ராணுவத் தளபதி நியமனத்தின்போது, பாரம்பரியமாக பின்பற்றப்படும் மூப்பு அடிப்படை கைவிடப்பட்டதாகவும் தகுதி அடிப்படையிலேயே பிபின் ராவத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

More