×

ரவுண்டு கட்டுவாரா ரங்கீலா பொண்ணு!


பாலிவுட் ஸ்டார் ஊர்மிளா மடோன்கர், காங்கிரஸ் கட்சியில் இணைந்ததுடன் வட மும்பை மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். சில ஆண்டுகள் முன் வரை சினிமா உலகை கலக்கிய இவர், இப்போது அரசியலிலும் சாதிப்பாரா என மக்கள் ஆவலுடன் இவரது அரசியல் பயணத்தை உற்று நோக்கி வருகிறார்கள். மற்ற இந்தி நடிகைகள் போல் மாடலிங்கிற்கு வந்து நடிக்க வரவில்லை ஊர்மிளா. சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து விட்டார். மராட்டிய படங்களிலிருந்து இந்தி சினிமாவிலும் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தார். அப்போதே அவரது க்யூட்டான முக சாயலால் சினிமா துறை அவரை அரவணைத்து கொண்டது. இளம் வயதில் அவர் ஹீரோயினாக நடித்த முதல் படம் இந்தியில் அல்ல, மலையாளத்தில். அதுவும் கமல்ஹாசனுடன். 1989ல் வெளியான சாணக்யன் படம்தான் அது. பிறகு இந்தி, தெலுங்கு உள்பட பல மொழிகளில் நடித்தவர், 1995ல் ரங்கீலா இந்தி படத்தில் நடித்தபோதுதான் ஸ்டார் அந்தஸ்தை பிடித்தார். ரங்கீலாவில் ஊர்மிளாவின் கவர்ச்சியும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் சுனாமியாக சுழன்றடித்து இந்திய சினிமாவை கலக்கியது.

ஒரே படத்தால் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறிப்போனார் ஊர்மிளா. அதே சமயம் ரங்கீலாவில் ஊர்மிளாவுக்கு திருப்புமுனையை கொடுத்த இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் ஆஸ்தான நடிகையாகவும் மாறிப்போனார்.சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து வந்தபோது 2016ல் காஷ்மீரை சேர்ந்த மாடல் மொஹசின் அக்தர் மீர் என்பவரை காதலித்து மணந்தார். இந்த நேரத்தில்தான் அவருக்கு அரசியல் புரிய ஆரம்பித்த தருணம். முஸ்லிம் ஒருவரை காதலித்து மணந்ததால் இந்துத்துவ அமைப்புகள் ஊர்மிளாவை ஆன்ட்டி இந்தியனாக்கி விட, அப்போது அமைதியாக இருந்தவர், சரியாக சில நாட்களுக்கு முன் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசில் இணைந்தார். இணைந்த கையோடு வட மும்பை தொகுதியில் பாஜ.வின் சிட்டிங் எம்.பி. கோபால் ஷெட்டி என்ற பெரும் புள்ளிக்கு எதிராக தில்லாக போட்டியிடுகிறார்.

அரசியலில் குதித்து இருப்பது பற்றி ஊர்மிளா அளித்திருக்கும் பேட்டியில், ‘மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக ஒருவரை அடித்தே கொன்ற கும்பலுக்கு இடையே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு கட்சி சாதி, மத, இன அடிப்படையில் மக்களை பிரிக்க முயல்கிறது. என்னை மதம் மாறச்சொல்லி எனது கணவர் வீட்டார் சொல்லவில்லை. நாங்கள் இந்தியர்களாக இருக்கிறோம். ஆனால், என்னை குறிப்பிட்ட விஷயத்துக்குள் அடக்கி, விஷமம் பரப்ப முயல்கிறார்கள்’ என்றார். தனது கோபத்தை சரியான திசையில் காட்டவும் தான் உண்மையான இந்திய குடிமகள் என்பதை நிரூபிக்கவுமே அரசியலுக்கு வந்திருப்பதாக சொல்கிறார் இந்த க்யூட் பேபி.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kavvara Rangela , Bollywood Star Urmila Madonkar, Congress
× RELATED பா.ஜ.க. மாணவர்களின் எதிர்காலத்துடன்...