×

சண்டிகாரில் காங். வேட்பாளர் பவன்குமார் பன்சால் பஞ்சாப் முதல்வர் மனைவிக்கு ‘சீட்’: புல்லட் புரூப் கார் பயன்படுத்த அனுமதி

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் மே 19ம் தேதி மக்களவை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் ஒரு அணியாகவும், அகாலி  தளம்-பாஜனதா ஒரு அணியாகவும், ஆம் ஆத்மி தனியாகவும், பஞ்சாப் ஏக்தா பார்ட்டி தனியாகவும் போட்டியிடுகின்றன. வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் கட்சி  தீவிரமாகியுள்ளது. முதல் கட்டமாக மொத்தம் உள்ள 13 தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை இறுதி செய்துள்ளது. அதில் தற்போது சிட்டிங் எம்பிக்களான 4  பேருக்கும் மீண்டும் சீட் கொடுத்துள்ளது. அதன்படி முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் சண்டிகார் தொகுதியில் மீண்டும் களம் இறங்குகிறார். மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர்  குர்தாஸ்பூர் தொகுதியிலும், ரவ்நீத் சிங் பிட்டு லூதியானாவிலும், சவுத்ரி சன்டோக் சிங், ஜலந்தர் தொகுதியிலும், குர்ஜித் சிங் அஜுலா அமிர்தசரஸ் தொகுதியிலும்  போட்டியிடுகின்றனர். மேலும், முதல் வர் அம்ரிந்தர் சிங்கின் மனைவியும் முன்னாள் மத்திய அமைச்சருமான பிரனீத் கவுர் பட்டியாலா தொகுதியிலும், சிட்டிங்  எம்எல்ஏவான ராஜ் குமார் ஜாப்வால் ஹோஷியார்புரி (தனி) தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

சண்டிகார் தொகுதியில் பவன்குமார் பன்சால், முன்னாள் அமைச்சர் மணீஷ் திவாரி மற்றும் பஞ்சாப் ஊராட்சித் துறை அமைச்சரான சித்துவின் மனைவி ஆகியோர்  இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் பன்சால் தேர்வாகியுள்ளார். மேலும், 7 தொகுதிகளுக்கு வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. மணீஷ் திவாரிக்கு அனந்தபுர்  சாகிப் தொகுதியில் வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.
 முதல்வர் அம்ரிந்தர் சிங்கின் மனைவியும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரனீத் கவுர் பட்டியாலா தொகுதியில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டதாக கட்சியினர்  நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே பிரனீத் கவுர் தேர்தல் பிரசாரத்தின்போது, தனது பாதுகாப்புக்காக குண்டு துளைக்காத கார் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என தேர்தல் கமிஷனில்  விண்ணப்பித்திருந்தார். அதனை ஏற்று அவர் குண்டு துளைக்காத கார் பயன்படுத்த தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து மாநில தேர்தல் அதிகாரி  கருணா ராஜூ கூறும்போது, ஒரே ஒரு வாகனத்தை அரசு அவருக்கு ஒதுக்கவேண்டும், அதற்கான பணத்தை வசூல் செய்து கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chandigarh ,Pawan Kumar Bansal , Cong, Chandigarh. , Pawan Kumar Bansal, Chief Minister's wife,
× RELATED அரியானாவில் ஆயுதங்கள், மதுபானங்கள் பறிமுதல்