திருவொற்றியூர்: பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, 44வது வார்டுக்கு உட்பட்ட வியாசர்பாடி பி.வி.காலனியில் நேற்று பிரசாரம் செய்தார்.அப்போது, அங்கு கூடியிருந்த ஏராளமான கட்சி தொண்டர்கள், பெண்கள், பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, அவரது நெற்றியில் திலகமிட்டு, பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்றனர். பின்னர், வீரபாண்டியன் தெரு, திருப்பூர் குமரன் தெரு, கட்டபொம்மன் தெரு, திரு.வி.க.தெரு, சுப்பிரமணிய தெரு, ரமணா நகர் போன்ற பகுதிகளில் திறந்த ஜீப்பிலும், நடந்தும் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்தார். அப்போது பல வீடுகளின் மாடிகளில் இருந்து ஆர்.எஸ்.ராஜேஷ் மீது மலர் தூவி பொதுமக்கள் வாழ்த்தினர். தெருக்களில் இருந்த நடைபாதை வியாபாரிகளிடம் வாக்கு கேட்டபோது, எங்கள் ஓட்டு இரட்டை இலை சின்னத்திற்குதான் என கூறி ஆர்.எஸ்.ராஜேஷுக்கு சிற்றுண்டி, குளிர்பானம் வழங்கினர்.
பிரசாரத்தின்போது ஆர்.எஸ்.ராஜேஷ் பேசியதாவது: அம்மாவின் ஆட்சியில் மக்களுக்கு பயனுள்ள பல நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஏழை, எளிய மக்கள் வளம்பெற வேண்டும் என்ற அம்மா ஆசை இன்றளவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெரம்பூர் தொகுதி மக்களின் நல்வாழ்விற்காக சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவேன். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, மாணவ, மாணவிகளின் எதிர்காலம் வளம்பெற சேவை செய்வேன். நான் வெற்றி பெற்றால், தொகுதியில் சாலை, குடிநீர், பாதாள சாக்கடை போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்கப்படும். எனவே, பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினராக உங்களுக்கு பணியாற்ற எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
