×

நாகர்கோவிலில் இன்று காலை பரபரப்பு வாலிபர் அடித்துக்கொலை? காயங்களுடன் உடல் மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

நாகர்கோவில்: நாகர்கோவிலில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டு இருப்பாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நாகர்கோவில் வடசேரி ஆறாட்டு ரோட்டில் மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் அடிப்பகுதியில் இன்று காலை வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்தார். இது குறித்து அந்த பகுதி பொது மக்கள் வடசேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வடசேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். வாலிபர் சடலம் கிடக்கும் தகவல் அறிந்ததும் பொது மக்களும் திரண்டனர். இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் விசாரணை நடத்திய போது இறந்து கிடந்தவர் சிவமணி (38), வடசேரி வெள்ளாளர் கீழ தெருவை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும் சம்பவ  இடத்துக்கு வந்து இறந்து கிடந்தது சிவமணி தான் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து சிவமணி உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சிவமணி எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. அவரது உடலில் காயங்கள் இருந்தன. எனவே அடித்து கொைல செய்யப்பட்டு இருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. சிவமணிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அவர் இறந்து கிடந்த இடத்தில் இருந்து சிறிது தொலைவில் தான் டாஸ்மாக் கடையும் உள்ளது. எனவே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் யாராவது சிவமணியை தாக்கி இருக்கவும் வாய்ப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் குடிபோதையில் வீட்டில் சிவமணி தகராறு செய்துள்ளார்.  அப்போது வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சென்று, சிவமணியை கண்டித்து உள்ளனர். இதனால் இரு நாட்கள் சிவமணி வீட்டில் ஒழுங்காக இருந்துள்ளார். இந்த நிலையில் அவர் மர்மமாக இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : recovery ,investigations , Nagarcoil, youth beat, physical recovery
× RELATED பலத்த காயங்களுடன் சடலம்...