×

ராஜஸ்தான் ஆளுநரின் பாஜ ஆதரவு பேச்சு தேர்தல் ஆணையத்திடம் கலெக்டர் ஆதாரம் தாக்கல்

புதுடெல்லி: ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண் சிங், பாஜ.வுக்கு ஆதரவாக பேசியதற்கான ஆதாரத்தை தேர்தல் ஆணையத்திடம் உத்தரப் பிரதேசம் அலிகார் மாவட்ட கலெக்டர் தாக்கல் செய்தார். இதனால், கல்யாண் சிங் பதவிக்கு சிக்கல் ஏற்படலாம் எனத் தெரிகிறது. ராஜஸ்தான் ஆளுநராக இருப்பவர் கல்யாண் சிங். இவர் உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர். இவர் உபி மாநிலம், அலிகரில் உள்ள தனது வீட்டுக்கு கடந்த 23ம் தேதி சென்றார். அப்போது, தேர்தலில் சீட் ஒதுக்கியதில் அதிருப்தியடைந்த பா.ஜ நிர்வாகிகள், தொண்டர்கள் அவரை வீட்டில் சந்தித்து புகார் தெரிவித்தனர். அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் பேசிய ஆளுநர் கல்யாண் சிங், ‘நாம் எல்லாம் பாஜ தொண்டர்கள். நமது கட்சி ஜெயிக்க வேண்டும் என நாம் விரும்புகிறோம். மோடி ஜி மீண்டும் பிரதமராக வேண்டும் என நாம் விரும்புகிறோம்’ என பேசினார். அரசியல் சாசன பதவியில் இருப்பவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும்.

ஆளுநர் கல்யாண் சிங்கின் பா.ஜ ஆதரவு கருத்தை தெரிவித்ததால் இது குறித்து புகார் செய்யப்பட்டது. இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அலிகார் மாவட்ட ஆட்சியருக்கு தேர்ல் ஆணையம் உத்தரவிட்டது. அவர் ஆளுநர் கல்யாண் சிங், பாஜ.வுக்கு ஆதரவாக பேசிய ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளார். அது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில் உள்ளதா என தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. கடந்த 1990ம் ஆண்டில் இமாச்சல் ஆளுநராக இருந்த குல்ஷேர் அகமது, தனது மகனுக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்கு தேர்தல் ஆணையம் தனது அதிருப்தியை தெரிவித்தது. இதையடுத்து அவர் பதவி விலகினார். அதுபோன்ற சிக்கல் கல்யாண் சிங்குக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Collector ,Election Commission ,Rajasthan , Collector, Election Commission, Rajasthan
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...