×

தனியார் நிறுவனத்தின் பரஸ்பர நிதி திட்டத்தில் 28,000 கோடி மோசடி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை கோரி மனு: தமிழக அரசு அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பரஸ்பர நிதி திட்டங்களை கைவிட்டதன் மூலம் 28 ஆயிரம் கோடி மோசடி செய்த பிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனத்திற்கு எதிரான வழக்கை கண்காணிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிராங்க்ளின் டெம்பிள்டன் அசட் மேனேஜ்மென்ட் எனும் நிதி நிறுவனம், இந்தியாவில் பரஸ்பர நிதி (மியூச்சுவல் பண்ட்) திட்டங்களை நடத்தி வந்தது. நாடு முழுவதும்  லட்சக்கணக்கான மக்கள் இந்த பரஸ்பர நிதிய திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர்.இந்நிலையில், கொரோனா பாதிப்பை காரணம் காட்டி, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், 6  பரஸ்பர நிதிய திட்டங்களை முடித்துக் கொண்டதாக இந்த நிறுவனம் 2020 ஏப்ரல் மாதம் அறிவித்தது. இதன் மூலம், நாடு முழுவதும் 3 லட்சத்து 15,621 முதலீட்டாளர்களிடம் இருந்து 28 ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாகக் கூறி, கோவையைச் சேர்ந்த பிரேம்நாத்  சங்கர் என்பவர்  புகார் அளித்தார். அதன்படி, பொருளாதார குற்றப் பிரிவினர், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இந்த வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கக் கோரி பிரேம்நாத் சங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், மோசடி தொடர்பாக, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யவில்லை. பொருளாதார குற்றப்பிரிவு தொடங்கியது முதல் எத்தனை வழக்குகள் பதியப்பட்டன, எத்தனை வழக்குகள் தண்டனையில் முடிந்துள்ளது என்று அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.  இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் பொருளாதார விவகாரங்கள், சந்தை நிலவரங்கள் குறித்த பயிற்சி பெற்ற அதிகாரிகளை பணியமர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.  இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தமிழக பொருளாதார குற்றப் பிரிவில் நிபுணத்துவம் பெற்றவர்களை நியமிப்பது குறித்த ஆலோசனைகளை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி, தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்….

The post தனியார் நிறுவனத்தின் பரஸ்பர நிதி திட்டத்தில் 28,000 கோடி மோசடி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை கோரி மனு: தமிழக அரசு அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Economic Crimes Division ,Tamil Nadu government ,ICourt ,Chennai ,Franklin Templeton Company ,
× RELATED போதைப்பொருள் ஒழிப்பில் தமிழக அரசு துரித நடவடிக்கை: ஐகோர்ட் கிளை பாராட்டு