×

களக்காடு மலையடிவாரத்தில் ஒற்றை யானை அட்டகாசம் : பனை மரங்களை சாய்த்தது

களக்காடு: களக்காடு மலையடிவாரத்தில் ஒற்றை யானை, 4 பனைகளை சாய்த்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. நெல்லை மாவட்டம் களக்காடு மேற்குத் தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு புலி, சிறுத்தை, யானை, கரடி, செந்நாய், நீலகிரி வரையாடு, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட பல்வேறு வகை விலங்கினங்கள் உள்ளன. இவைகள் அவ்வப்போது மலையடிவார பகுதியில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம். நேற்று முன்தினம் இரவில் களக்காடு அருகே சிதம்பரபுரம் அகலிகை சாபம் தீர்த்த அய்யன் சாஸ்தா கோயில் மலையடிவார பகுதியில் ஒற்றை யானை புகுந்தது.

இந்த யானை வனப்பகுதியில் உள்ள 3 பனைகளை சாய்த்தது. அதன் பின் வனப்பகுதியில் இருந்து வெளியேறி தனியார் தோட்டத்தில் இருந்த ஒரு பனை மரத்தையும் வேரோடு சாய்த்தது. தொடர்ச்சியாக பனை மரம் சாய்ந்து விழுந்த சத்தத்தை கேட்ட விவசாயிகள், அங்கு சென்று பார்த்தபோது ஒற்றை யானை பனை மரங்களை சாய்த்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் களக்காடு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின் பேரில் வனச் சரகர்கள் களக்காடு புகழேந்தி, திருக்குறுங்குடி கமலக்கண்ணன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானை சாய்த்த பனை மரங்களை பார்வையிட்டனர். யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இரவில் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ளப்படும் என்றும் அவர்கள் கூறினர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kalakkad, elephant, palm tree
× RELATED ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில்...