×

குன்றத்தூர், மணலி, திருமங்கலம் பகுதிகளில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 67.83 லட்சம் அதிரடியாக பறிமுதல்: பறக்கும் படை நடவடிக்கை

சென்னை: குன்றத்தூர், மணலி, திருமங்கலம் பகுதிகளில் முறையான ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ₹67.83 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, தேர்தல்  பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடத்தி  வருகின்றனர். உரிய ஆவணம் இல்லாமல் ₹50  ஆயிரத்துக்கும் மேல் கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்நிலையில், குன்றத்தூர் அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு குன்றத்தூர் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு வேனை மடக்கி  சோதனை செய்தனர்.அதில், கணக்கில் வராத ₹53 லட்சம் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதுபற்றி வேன் டிரைவரிடம் போலீசார் விசாரித்தபோது, குன்றத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வசூலான  பணத்தை தனியார் ஏஜென்சி மூலம் தேனாம்பேட்டையில் உள்ள வங்கியில் செலுத்துவதற்கு கொண்டு செல்வதாக கூறினார்.

ஆனால், அதற்கு உரிய ஆவணம் இல்லை. இதனால், போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அதை பெரும்புதூர் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். அப்பணத்துக்கு உரிய ஆவணங்களை காட்டி  பெற்றுக்கொள்ளும்படி கூறி வேனில் வந்தவர்களை அனுப்பி வைத்தனர்.இதேபோல், பறக்கும் படை அதிகாரி சிவகுமார், போலீஸ் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோர் மணலி எம்எப்எல் சந்திப்பில் ேநற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு  காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் ₹5 லட்சம் இருந்தது. விசாரணையில், காரில் வந்தவர் பெங்களூரு வானஸ்பாடி கிரீன் பார்க் அவென்யூ பகுதியை சேர்ந்த சந்திரசேகர ரெட்டி என்பதும், இவர் மெட்ரோ ரயில் நிறுவன கான்ட்ராக்டர் என்பதும் தெரிந்தது. மேலும், திருவொற்றியூரில்  மெட்ரோ ரயில் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொண்டு வந்ததாக தெரிவித்தார்.

ஆனால் அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து உரிய ஆவணங்களை கொண்டு வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறிய பறக்கும் படை அதிகாரிகள், அந்த பணத்தை பறிமுதல் செய்து பொன்னேரி அரசு  கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோல், திருமங்கலம் சாந்தி காலனியில் பறக்கும் படை அதிகாரி விஜயராகவன், இன்ஸ்பெக்டர்கள் சரவணன், வேல்முருகன் ஆகியோர் நேற்று முனதினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோவை மடக்கி சோதனை செய்தபோது, அதில் ₹9.83 லட்சம் இருந்தது. விசாரணையில், சரக்கு ஆட்டோவில் வந்தது அம்பத்தூர் பகுதியை சேர்ந்த சரவணன் (28) என்பதும், சென்னை  பிராட்வே பகுதியில் காய்கறிகளை இறக்கிவிட்டு வந்ததும் தெரிந்தது. அவரிடம் இருந்த பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால், பறக்கும் படை அதிகாரிகள் அதை பறிமுதல் செய்து பெரம்பூரில் உள்ள உதவி கருவூல அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kundrathur ,Manali ,areas ,Tirumangalam , Kudanthathur, Manali ,Tirumangalam, areas
× RELATED மணலி சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்