×

அதிகரிக்கும் புகார்கள் எதிரொலி சென்னையில் பறக்கும் படை எண்ணிக்கை 144 ஆக அதிகரிப்பு: மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி

சென்னை: சென்னை மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் பறக்கும் படைகளின் எண்ணிக்கை 144 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் தெரிவித்தார். சென்னை மாவட்டத்தில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அடுத்த மாதம் 18 ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலை முன்னிட்டு,  மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து 20,271 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தபடவுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் இந்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்தப் பயிற்சி வகுப்புகளில் மின்னணு  வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.  வியாசர் பாடியில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சி முகாமை சென்னை மாநகராட்சி ஆணையரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரகாஷ் நேரில் பார்வையிட்டார். இதன்பிறகு அவர்  செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், அரசு சார்ந்த ஊழியர்கள் என  20 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு  நான்கு கட்டமாக பயிற்சி வழங்கப்பட உள்ளது.

சென்னையில் 16 மையங்களில் முதல் கட்ட பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. அடுத்த கட்ட பயிற்சி முகாம் வரும் 7,4 மற்றும் 17 ம் தேதிகளில் நடைபெறுகிறது. சென்னையில் மொத்தம் 3754 வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் 333 பதற்றமானவை என்றும், 337 மிகவும் பதற்றமானவை  என்றும்  கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குசாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு  ஏற்பாடுகள் செய்யப்படும். 10,796 வாக்குபதிவு எந்திரம், 5298 கட்டுப்பாட்டு இயந்திரம், 6648 விவிபேட் எந்திரம் ஆகியவைகள் தயார் நிலையில் உள்ளது. பறக்கும் படைகளின் எண்ணிக்கை 144 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  அரசு கட்டிடங்களில் இருந்த 11,800  விளம்பரங்களும், தனியார் கட்டிடங்களில் இருந்த 12, 333 விளம்பரங்களும்அழிக்கப்பட்டு உள்ளன. இனிமேல் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டால் அவை அழிக்கப்பட்டு அதற்கான செலவை அந்த கட்சிகளிடம் இருந்து வசூலிக்க  நடவடிக்கை எடுக்கப்படும். உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 1 கோடி 37 லட்சத்து 130 ரூபாய் இதுவரை  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து 13.4 கிலோ தங்கம், 86.2 கிலோ வெள்ளி, 960 செல்போன் உள்ளிட்டவைகளும்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai Chennai ,crews ,District Election Officer , Increasing, complaints, 144,District Election ,Officer interviewed,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையங்களில் குறைபாடா?...