×

டிடிவி தினகரன் ஆரம்பத்தில் இருந்து ஜாதி வெறியோடு தான் செயல்படுகிறார் வேட்பாளர்கள் ஜாதி அடிப்படையிலேயே தேர்வு : இணைச்செயலாளர் வைத்தியநாதன் குற்றச்சாட்டு

சென்னை: டிடிவி தினகரன் ஆரம்பத்தில் இருந்தே ஜாதி வெறியோடு தான் செயல்படுகிறார் வேட்பாளர்களை கூட ஜாதி அடிப்படையில் தான் தேர்வு செய்துள்ளார் என்று அமமுக இணைச்செயலாளர் வைத்தியநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.  எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் தலைமையிலான அதிமுகவிற்கு எதிராக டிடிவி தினகரன் அமமுகவை துவங்கினார். அப்போது, தினகரனுக்கு எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் ஆதரவு தெரிவித்தனர். அப்படி ஆதரவு கொடுத்தவர்களில் வி.பி.கலைராஜன் முக்கிய பங்கு வகித்தார். நெருக்கமாக இருந்த கலைராஜன் சமீப காலமாக அக்கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை.

மேலும், ஆலோசனை கூட்டங்களையும் புறக்கணித்து வந்தார். இதுகுறித்து டிடிவிக்கு புகார் சென்றது. . இந்நிலையில் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் வி.பி.கலைராஜன் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப்பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அறிவித்தார். இதையடுத்து அவர் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இந்நிலையில் வி.பி.கலைராஜன் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பொறுப்பை வி.சுகுமார் பாபு என்பவருக்கு வழங்கியதையடுத்து அதிர்ச்சியடைந்த இணைச்செயலாளர் வைத்தியநாதன் நேற்று நேரடியாக டிடிவி தினகரன் இல்லத்திற்கு சென்று முற்றுகையிட முயற்சித்து டிடிவி தினகரனின் உதவியாளரான ஜனார்த்தனனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து வைத்தியநாதன் கூறியதாவது: டிடிவி தினகரன் அமமுக என்ற பெயரில் ஜாதி கட்சியை நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் தொண்டர்களை இன்முகத்துடன் அழைத்துபேசிய அவரின் இயல்பு இப்போது முற்றிலும் மாறிவிட்டது. ஜெயலலிதாவை விட தன்னை தான் உயர்ந்தவர் என்ற ரீதியில் அவர் செயல்பட்டு வருகிறார். ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிடாமல் இருந்திருந்தால் அதிமுக உடைந்திருக்காது. வெற்றிவேல் மூலைசலவை செய்ததால் தான் அதிமுக இந்த நிலைமைக்கு ஆளாகி உள்ளது. அமமுகவின் பொது செயலாளராக வெற்றிவேல் தான் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில் டிடிவி தினகரனை நம்பி வந்த நாங்கள் இப்போது நடுத்தெருவில் நின்றுகொண்டு இருக்கிறோம். மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களை ஜாதிய அடிப்படையிலேயே டிடிவி தேர்வு செய்துள்ளார்.

டிடிவி தினகரன் ஆரம்பத்தில் இருந்தே ஜாதி வெறியோடு தான் செயல்பட்டு வருகிறார். மோடியின் அச்சுறுத்தலுக்கு பயந்தே தினகரன் கூட்டணி அமைக்காமல் செயல்பட்டு வருகிறார். மோடியை எதிர்ப்பதாக பொய் சொல்லிவிட்டு உள்ளுக்குள்  பயந்துகிடக்கிறார். தினகரன் அமமுகவை வெற்றிவேலிடம் அடகு வைத்துவிட்டு தொண்டர்களை ஏமாற்றிவிட்டார். மேலும் இந்த நொடியில் இருந்து அமமுகவில் இருந்து வெளியேறுவதாக வைத்தியநாதன் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : TDV Dinakaran ,Vaidyanathan ,beginning , TTV Dinakaran, cast,candidates ,Vaidyanathan...
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில்...