×

பச்சை வண்ணத்தில் கலக்கும் புதிய பஜாஜ் டோமினார் 400

வடிவமைப்பில் சிறிய மாறுதல்களுடன் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட புதிய பஜாஜ் டோமினார் 400 பைக் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த புதிய டோமினார் பைக்கின் படங்கள் தொடர்ந்து இணையதளங்களில் வெளியாகி வருகின்றன. இதில் கவனிக்கத்தக்க விஷயம், கவாஸாகி பைக்குகள் போன்றே விசேஷ கிளி பச்சை வண்ணத்தில் புதிய டோமினார் பைக் வர இருப்பதுதான். இது, பைக் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்புதிய டோமினார் 400 பைக்கின் டிசைனில் பெரிய மாறுதல்கள் செய்யப்படவில்லை. ஆனால், இரட்டை பேரல் புகைப்போக்கி அமைப்பு பொருத்தப்பட்டு இருக்கிறது. இது ஸ்போர்ட்ஸ் க்ரூஸர் ரகத்தை சேர்ந்த மாடல் என்பதால், இந்த பைக்கில் எல்சிடி திரையுடன்கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பெட்ரோல் டேங்கில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கியர் பொசிஷன் இன்டிகேட்டர், ட்ரிப் மீட்டர், இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பது போன்ற பல தகவல்களை இந்த மீட்டர் கன்சோல் மூலமாக தெரிந்துகொள்ள முடியும். இந்த பைக்கின் இன்ஜினில் மாற்றம் இல்லை. இந்த பைக்கில் 373.3 சிசி லிக்யூடு கூல்டு இன்ஜின் தக்கவைக்கப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 35 பிஎச்பி பவரையும், 34 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இப்புதிய மாடலில் அப்சைடு டவுன் போர்க்குகள் கொண்ட முன்புற சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் முன்புறத்தில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்துடன் வருகிறது. இந்த பைக் மாடலானது கேடிஎம் டியூக் 390, ஹோண்டா சிபி300ஆர் மற்றும் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 போன்ற மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். கவாஸாகி பைக்குகளில் இடம்பெறும் கிளி பச்சை வண்ணம் வாடிக்கையாளர் மத்தியில் பிரபலமானது. கவாஸாகி நிறுவனத்துடன் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கூட்டணி அமைந்து செயல்பட்டது. அந்த நினைப்பில் இந்த வண்ணத்தை பஜாஜ் ஆட்டோ சேர்த்திருக்கலாம் என கருதப்படுகிறது. கடந்த 2017ம் ஆண்டு பஜாஜ் ஆட்டோ நிறுவனத்துடனான கூட்டணியை கவாஸாகி முறித்துக்கொண்டு தனியாக இந்தியாவில் வர்த்தகத்தை செய்து வருகிறது. இப்புதிய பைக்கின் விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bajaj Dominar 400, green color
× RELATED சாலையோரங்களில் கலர், கலராய் விற்பனை...