×

அழகர் இறங்கும்போது வைகை ஆற்றில் தண்ணீர் வந்தால் தாங்குமா தடுப்பணை..?

*ஒரே மாதத்தில் பணி முடித்தால் கதி என்ன?
* காத்திருக்குது இன்னொரு புது குழப்பம்

மதுரை : சித்திரை திருவிழாவோடு தேர்தல் நாள் அமைந்த குழப்பத்தை போல், இன்னொரு புது குழப்பம் எழுந்துள்ளது. அழகர் ஆற்றில் இறங்க வைகை ஆற்றில் தண்ணீர் திறக்க தயாராகி இருக்கும் நிலையில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் 2 தடுப்பணைகள் கட்டும் பணி தொடங்கி மின்னல் வேகத்தில்  நடைபெற்று வருகின்றன. ஒரே மாதத்தில் வேகமாக பணியை முடித்தால் அந்த தடுப்பணைகளின் கதி என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் வைகை ஆற்றின் குறுக்கே 2 தடுப்பணைகள் கட்டப்படுகிறது. கோரிப்பாளையம்-யானைக்கல் இடையே ஏ.வி.மேம்பாலம் அருகிலும், முனிச்சாலை-மதிச்சியம் இடையே ஓபுளாபடித்துறை பாலம் அருகிலும் இந்த தடுப்பணைகள் கட்டும் பணி சமீபத்தில் தொடங்கி மின்னல் வேகத்தில் நடக்கிறது. தற்போது ஆற்றில் தண்ணீர் இல்லை. ஆனால் சித்திரை திருவிழாவின் உச்சகட்டமாக அழகர் வைகை ஆற்றில் இறங்கும் ஏப்ரல் 19ம் தேதிக்கு 2 நாட்களுக்கு முன் அணையில் இருந்து தண்ணீர் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த தண்ணீர் ஏப்ரல் 18, 19 தேதிகளில் ஆற்றில் மதுரை நகரை தாண்டி ஓடும். அதற்குள் தடுப்பணைகள் கட்டி முடிக்க வாய்ப்பு இல்லை. அதையும் மீறி அவசரகோலத்தில் கட்டி முடித்தால், ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரை புதிய தடுப்பணைகள் தாங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து மூத்த பொறியாளர் ஒருவர் கூறும்போது, ‘‘ஆற்றில் தடுப்பணைகள் கட்டுவதற்கு பொதுப்பணித்துறைகள் விதிமுறைகள் உள்ளன. இன்னும் ஒரு மாதத்தில் சித்திரை திருவிழாவுக்கு ஆற்றில் தண்ணீர் திறப்பது நிச்சயம் என்பதை அறிந்திருந்தும், அவசரகோலத்தில் தடுப்பணைகள் கட்டினால் அதன் கதி என்னாகும்? முன்கூட்டியே திட்டமிட தவறியதின் விளைவாக தான் இப்போது புது குழப்பம் எழுகிறது. ஆட்சியாளர்கள் ஆதாயத்தை மட்டும் குறியாக கொண்டு பொதுப்பணித்துறையினருக்கு அழுத்தம் கொடுத்து அவசர கோலத்தில் தடுப்பணை கட்டுகிறார்கள்.


இதனை கட்டி முடிக்க குறைந்தது 6 மாதம் அவகாசம் தேவை. தண்ணீரில் தடுப்பணைகள் பாதி கட்டிய நிலையில் கரைந்து போகாதா?’’ என்றனர்.


சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘ஆட்சியாளர் அழுத்தம் காரணமாக சித்திரை திருவிழா தேரோட்டம், அழகர் எதிர்சேவையை ஆணையத்துக்கு எழுதாமல் மதுரை மாவட்ட கலெக்டர் மூடி மறைத்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சித்திரை திருவிழாவுக்கு தண்ணீர் திறப்பது முன்கூட்டியே தெரிந்தும், அதை மறைத்து தடுப்பணை கட்டுவது புது குழப்பமாக உள்ளது’’ என்றனர். பொதுப்பணித்துறையினர் கூறும்போது, ‘‘அழகருக்காக ஆற்றில் தண்ணீர் திறந்தாலும், தடுப்பணை அருகில் தேங்காமல் ஓரமாக கால்வாய் தோண்டி திருப்புவோம்’’ என்கின்றனர்.

ஆற்றின் ஓரமாக கால்வாய் தோண்டி அதில் தண்ணீரை திருப்பினால் அழகர் இறங்கும் பகுதியில் எப்படி தேங்கும்? கால்வாயில் சகதியாகி பக்தர்கள் இறங்கி குளிப்பது அபாயகரமானது.

தடுப்பணைகளால் என்ன பயன்?

வைகை ஆற்றில் கழிவுநீர் அதிகம் கலக்கும் பகுதியில் தான் இந்த இரு தடுப்பணைகளும் கட்டப்படுகின்றன. எனவே ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் தடுப்பணைகள் மட்டும் கட்டி முடித்தால் அதில் தண்ணீர் தேங்க வாய்ப்பு இல்லை. பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கி பெரும் சுகாதாரக்கேடு உருவாக்கும் என்று கூறும் பொறியாளர்களின் எச்சரிக்கையை மீறி கட்டப்படுகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Alagar ,river ,Vaigai , Vaigai ,kallalagar Festival,water ,Madurai,Preventive dam
× RELATED கடமலை-மயிலை ஒன்றியத்தில் மூல வைகையில்...