×

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமானவரி சோதனை: திமுகவுக்கு ஆதரவு பெருகியதால் பாஜ அதிகார துஷ்பிரயோகம்: தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது என்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் மனு கொடுத்துள்ளது.  திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜிவ் குமார், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆகியோருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாரமரை வசிக்கும் நீலாங்கரை வீட்டில் ஏப்ரல் 2ம் தேதி காலை வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வருமான வரித்துறையை பாஜ அரசு ஆயுதமாக பயன்படுத்தி தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஏன் சோதனை நடத்த வேண்டும். தமிழக மக்களின் ஒட்டுமொத்த ஆதரவும் திமுக பக்கம் உள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்து வருகின்றன. திமுக ஆட்சி அமைக்க உள்ளதாகவும், 234 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது திமுகவின் தேர்தல் பிரசாரங்களில் காண முடிகிறது. கடந்த 10 ஆண்டுகளாக அதிகரித்த ஊழல்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், உயர் போலீஸ் அதிகாரி நடத்திய பாலியல் தொந்தரவு உள்பட பணி இடங்களில் பாலியல் தொந்தரவுகள் அதிகரித்தல் போன்றவை தமிழக மக்களின் மனதில் திமுகவுக்கு ஆதரவை அதிகரித்துள்ளது. திமுக இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதை ஏற்க முடியாத அதிமுக-பாஜ கூட்டணி திமுகவின் பெயரை கெடுக்க நினைக்கிறார்கள். அதன் ஒரு கட்டமாகத்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது பிரசாரத்தின்போது அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவின் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்தார். தேர்தல் பிரசாரத்தின்போது திமுகவுக்கு மக்கள் அளிக்கும் அதிக வரவேற்பை பாஜவால் ஏற்க முடியவில்லை. அதனால்தான் தற்போது நடைபெறும் வருமானவரித்துறை சோதனை.எனவே, திமுகவின் நற்பெயரை கெடுப்பதற்காக தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாக அதிகாரிகளை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று பாஜவுக்கு உத்தரவிட வேண்டும்.  மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 123(7) குறித்து தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.  அதில், கெசடட் அதிகாரிகள், நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், ராணுவத்தினர், போலீஸ் அதிகாரிகள், கலால் துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், ஆணையர்கள் போன்ற அதிகாரிகள் எந்த வேட்பாளர்களுக்கும் ஆதரவாக தங்களது அதிகாரத்தை பயன்படுத்த கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த பிரிவில் உள்ள அரசு அதிகாரிகள் வேட்பாளர்கள், அவர்களின் தேர்தல் ஏஜென்ட்கள், உதவி செய்வதோ, வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு உதவி செய்வதோ, அதற்கான வசதிகளை செய்து தருவதோ கூடாது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மீது பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். வேட்பாளர்களுக்கு ஆதரவாக அதிகாரிகளை நியமனம் செய்வது, பணி நீக்கம் செய்வது போன்ற செயல்களும் நடைபெறக்கூடாது.  ஆனால், பாஜவின் தூண்டுதல் காரணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலுடன் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. வருமான வரித்துறையின் இந்த செயல்கள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு முற்றிலும் முரணானது. சட்டத்திற்கு புரம்பாக திமுகவின் பெயரை கெடுப்பதற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளனர். எனவே, தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் அரசியல் கட்சிகள் தங்களின் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. திமுகவின் மூத்த வக்கீல் பி.வில்சன், வக்கீல் நீலகண்டன் ஆகியோர் தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் கொடுத்த பின் பி.வில்சன் கூறும்போது, திமுக மற்றும் திமுக அறக்கட்டளை சார்பில் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது தேர்தல் நேரத்தில பாஜ வருமான வரித்துறை மூலம் திமுகவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கும் என்று வாதிட்டிருக்கிறோம். அது இப்போது நிரூபணமாகியுள்ளது. திமுகவுக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கை தாங்க முடியாமல் திமுகவின் பெயருக்கு மக்கள் மத்தியில் களங்கம் ஏற்படுத்த பாஜவும், அதிமுகவும் செயல்பட்டு வருகின்றன. வருமான வரித்துறை சோதனை மூலம் அதிமுக, பாஜ வேட்பாளர்களுக்கு உதவி செய்யும் நடவடிக்கைகளில் மத்திய அரசும், அதிமுகவும் இணைந்து இறங்கியுள்ளது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு முரணானது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளோம் என்றார்….

The post திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமானவரி சோதனை: திமுகவுக்கு ஆதரவு பெருகியதால் பாஜ அதிகார துஷ்பிரயோகம்: தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் appeared first on Dinakaran.

Tags : President ,Djagar ,BM ,G.K. Stalin ,Baja ,Dhagu ,Dishagam ,Election Commission ,Chennai ,Djagam ,Kjagal Leader ,B.M. ,Dimuga ,Dizzagi ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன...