×

சமூக செயற்பாட்டாளர் முகிலன் புகைப்படத்துடன் 'காணவில்லை'சுவரொட்டி வெளியீடு: சி.பி.சி.ஐ.டி அறிக்கை

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆவணப்படம் வெளியிட்ட சில நாட்களிலே மாயமான சமூக செயற்பாட்டாளர் முகிலன் குறித்த சுவரொட்டியை சி.பி.சி.ஐ.டி வெளியிட்டுள்ளது. அதில், முகிலன் புகைப்படம் மற்றும் விவரங்களுடன் கூடிய சுவரொட்டியை வெளியிட்டுள்ளது. கடந்த 15-ஆம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து ஸ்டெர்லைட் தொடர்பாக பரபரப்பு தகவலை முகிலன் அளித்தார். அதில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த வன்முறையில் பொதுமக்களுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. போலீஸ் உயரதிகாரிகள்தான் வன்முறைக்கு காரணம் என்பது தொடர்பான ஆதாரங்களை முகிலன் வெளியிட்டார். பின்னர் பேசிய அவர் இந்த ஆதாரங்களை வெளியிடுவதால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சந்திப்பு முடிவுற்ற பிறகு எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து மதுரைக்கு ரயிலில் சென்றுள்ளார். இரவு 10.30 மணிக்கு நண்பர்களுடன் போனில் பேசிய அவரிடம் இருந்து எந்தவிதமான தகவலும் வரவில்லை. அவர், பாதி வழியில் மாயமானதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பு சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, தொடர்ந்து பல்வேறு தரப்பிலும் எழுந்த கோரிக்கைகள் மற்றும் வற்புறுத்தலின் அடிப்படையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக 150க்கும் மேற்பட்டோரை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்துள்ளனர். குறிப்பாக முகிலன் மயமான அன்று இரவு 10.30 மணிக்கு அவர் ரயில் நிலையத்திற்குள்ளே நுழைந்த காட்சிகள் வெளியானது.

இந்த சிசிடிவி காட்சிகள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், அவர் 11.30 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்திற்கு செல்வது போன்ற காட்சிகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியானது.  இந்த நிலையில், ஒருமாதமாகியும் அவர் எங்கு இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் சுவரொட்டிகளை ஒட்டி முகிலனை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் சி.பி.சி.ஐ.டி போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதில் முகிலனை காணவில்லை என்றும் அவர் குறித்து தகவல் அளிப்போருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 044- 28513500, 99629 08908 என்ற எண்களுக்கு தகவல் கொடுக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CBC ,release , Mugilan, Poster, missing, CBCID police
× RELATED பாரூர் ஏரியில் இருந்து கால்வாய்களை...